
சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருந்தாக்கியல் துறை, தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம், தமிழ்நாடு மருந்தாளுநர் சங்கம் இணைந்து செப் 25-ம் தேதி உலக மருந்தாளுநர் தினத்தில் மருந்தாளுநர்கள் பற்றிய விழிப்புணர்வு பேரணி, போதைப் பொருட்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்க ஆசிரியர்கள் மாணவர்கள் பொதுமக்கள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, இன்றைய சமுதாயத்தில் பெற்றோர்கள், பிள்ளைகளுக்கான புரிதல் இடைவெளியை சரி செய்வது எப்படி என்ற முப்பெரும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக மருந்தாக்கியல் துறை பேராசிரியர் தனபால் அனைவரையும் வரவேற்றார். இன்றைய காலகட்டத்தில் மருந்தாளுநர் பங்களிப்பு பற்றிய பதாகையை ராஜா முத்தையா மருத்துவப் புலமுதல்வர் சண்முகம் வெளியிட பொறியியல் புல முதல்வர் முருகப்பன் பெற்றுக்கொண்டார்.
போதைப்பொருட்கள் இல்லா தமிழகத்தை உருவாக்க உறுதிமொழி ஏற்பு பதாகையை மருந்தாக்கியல் துறை தலைவர் ஜானகிராமன் மற்றும் சிதம்பரம் சரக மருந்துகள் ஆய்வாளர் சைலஜா வெளியிட சிதம்பரம் துணை காவல்துறை கண்காணிப்பாளர் ரமேஷ் ராஜ் பெற்றுக்கொண்டார். அனைவரும் போதை பொருளுக்கு எதிரான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரமேஷ்ராஜ் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். பேரணியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர், சிதம்பரம் ரோட்டரி கிளப் ஆப் மிட்டவுன் உறுப்பினர்கள், சிதம்பரம் லயன்ஸ் கிளப் ஆப் சோசியல் மிஷன் அண்ட் விஷன் உறுப்பினர்கள், கடலூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க மருந்தாளுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் கலந்து கொண்டு சிதம்பரம் நகரத்தின் நான்கு வீதிகளிலும் கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு கலந்து கொண்டனர்.
இதில் சிறப்பு விருந்தினராக ரகுபதி ,மதுசூதனன் கலந்து கொண்டனர். மாணவர் பேரவைத் தலைவர் ஹரிஹரன் ஒருங்கிணைப்பு பணியை மேற்கொண்டனர். பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு மயூரி மெடிக்கல் மற்றும் சண்முக விலாஸ் பேக்கரி சார்பாக குடிநீர், இனிப்புகள் வழங்கப்பட்டது. தமிழ்நாடு மருந்தாளுநர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வெங்கட சுந்தரம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.