தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்யும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், 'பந்தயம், சூதாட்டம் ஆகிய விளையாட்டுகள் மீது மட்டுமே மாநில அரசுகளால் சட்டம் இயற்ற முடியும். இதில் திறன்களை வளர்க்கக்கூடிய சில விஷயங்கள் இருக்கிறது எனவே, ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய முடியாது. இதுபோன்ற சட்டத்தை இயற்றும் அதிகாரம் மாநில சட்டப்பேரவைக்கு இல்லை. திறன் சார்ந்த ஆன்லைன் விளையாட்டுகள் மத்திய அரசின் பட்டியலில் இருப்பதாக சட்ட ஆணையம் தெரிவித்திருக்கிறது. பெட்டிங் உள்ளிட்ட அதிர்ஷ்டத்தால் வெல்லக்கூடிய விளையாட்டுகள் மட்டுமே மாநிலப் பட்டியலில் 34வது பிரிவில் இருக்கிறது என்று கூறி ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க மறுத்து ஆளுநர் திருப்பி அனுப்பி வைத்துவிட்டார். இருப்பினும், மீண்டும் சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதாவை நிறைவேற்றி நேற்று ஆளுநருக்கு தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது.
இந்த நிலையில், ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனை ஊழியர் ரவிசங்கர் (37) ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்துள்ளார். இதனால் கடன் தொல்லையால் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இதுவரை ஆன்லைன் ரம்மியால் 41 பேர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தற்போது மேலும் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.