சென்னை பாரிமுனையில் கோயிலுக்கு அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
சென்னை பாரிமுனையில் வீரபத்திரசாமி கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு அருகே பல்வேறு கடைகள் உள்ளன. இந்நிலையில் அந்தப் பகுதிக்கு மதுபோதையில் வந்த முரளி என்ற நபர், திடீரென கோயிலை நோக்கி பெட்ரோல் குண்டு வீசியதாகக் கூறப்படுகிறது. கோவில் அருகே பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்ட முரளியும் அதே பகுதியில் கடை வைத்துள்ளார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து அந்தக் கோவிலின் பூசாரி தெரிவிக்கையில், ''காலையில் 8:50 மணி இருக்கும். நாங்க வாசலில்தான் உட்கார்ந்து கொண்டு இருந்தோம். நேரா வந்தாரு திடீரென பாட்டில் எடுத்து வீசிட்டாரு. தக தகவென எரிந்தது. நாங்க தண்ணி போட்டு அணைத்து விட்டோம். நான் வேண்டியதை கொடுக்கலன்னு வீசி அடிச்சாரு'' என்றார்.
இந்நிலையில் முரளியை பிடித்து விசாரித்ததில், அந்தப் பகுதியிலேயே உள்ள டீக்கடை ஒன்றில் அமர்ந்து பெட்ரோல் குண்டு தயாரித்ததாக வாக்குமூலம் அளித்தார். அந்த டீக்கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் பரிசோதித்ததில் சாவகாசமாக அமர்ந்து முரளி வாட்டர் பாட்டிலில் உள்ள பெட்ரோலை மதுபாட்டிலில் ஊற்றி பெட்ரோல் குண்டு தயாரித்துள்ளார். கடையில் சுற்றி இருந்தவர்கள் இதனை ஒரு மாதிரியாக பார்த்தாலும் யாரும் கேள்வி எழுப்பவில்லை. கோவிலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட செய்தி அறிந்து அங்கு வந்த உயர்நீதிமன்ற நீதிபதி நிரஞ்சன் காவல்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.