திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தென்முடியனூர் பகுதியில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் போலீசார் பாதுகாப்புடன் கோவிலுக்குள் செல்ல மக்கள் ஆயத்தமாகியுள்ளனர்.
அண்மையில் புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் அய்யனார் கோவிலில் ஒரு சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியரின் அதிரடி நடவடிக்கையால் குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த மக்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வழிபடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தென்முடியனூர் பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் சென்று வழிபட கடந்த 80 வருடங்களுக்கு மேலாக அனுமதி மறுக்கப்பட்டு வந்துள்ளது. தொடர்ந்து அந்த மக்கள் கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதி கேட்டு இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உடனடியாக மனுவை பரிசீலனை செய்து கோவிலுக்குச் சென்று வழிபட உத்தரவளித்தார்.
இதனையடுத்து டிஐஜி, மாவட்ட ஆட்சியர், எஸ்பி ஆகியோர் அம்மக்களை கோவிலுக்குள் அழைத்துச் சென்று வழிபட வைத்தனர். இப்பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.