கடந்த ஜூலை 13- ஆம் தேதி அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகே உள்ள கனியாமூர் பகுதியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், சம்மந்தப்பட்ட பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக, 307 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், பள்ளி நிர்வாகிகள் 3 பேரும், பள்ளி ஆசிரியர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டு அனைவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினருக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க கோரி இறந்த மாணவியின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் விசாரணையை விரைந்து முடித்து அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி-க்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.