தமிழ்நாட்டில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததாக கூறி 46 அரசுப்பள்ளிகளை மூடி அதில் நூலகம் திறக்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி ஒன்றியத்தில் உள்ள குளத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் ஆவுடையார்கோயில் ஒன்றியத்தில் உள்ள சின்னபட்டமங்களம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இரு பள்ளிகளும் மூடப்பட்டு நூலகம் தொடங்கும் பணி நடந்துவந்தது.
இந்நிலையில் கடந்த 9 ந் தேதி குளத்தூர் மக்களை சந்தித்து பள்ளியை திறக்க மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று கிராம மக்களிடம் நீண்ட நேரம் நாம் பத்திரிகை நண்பர்கள் பேசியதால் உடனடியாக கிராம கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றி 13 ந் தேதி 11 குழந்தைகளுடன் மூடிய பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது. அன்றே மற்றொரு பள்ளியான சின்னபட்டமங்களம் கிராமத்திற்கு சென்று அப்பகுதி பெண்கள் மற்று கிராம தலைவர் உள்ளிட்ட பொதுமக்களிடம் அரசுப் பள்ளியின் முக்கியத்துவம் குறித்து நாம் பேசிய நிலையில் ஆசிரியர் பள்ளிக்கு வருவதில்லை, மாணவர்களை சேர்க்க மறுத்தார் என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
தொடர்ந்து அந்த குறைகளை அதிகாரிகள் சரி செய்வார்கள் என்று நம்பிக்கையாக பேசியதால் உடனடியாக கிராம கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி வட்டார கல்வி அலுவலருக்கு கொடுத்தனர். இந்தநிலையில் இன்று 10 குழந்தைகளுடன் வந்த பெற்றோர்கள் பள்ளி உள்ளூர் ஆசிரியைகளைக் கொண்டு பாடம் நடத்த தொடங்கினார்கள். இந்த தகவல் அறிந்து வந்த ஆவுடையார்கோயில் வட்டார கல்வி அலுவலர் லதா பேபி பெற்றோர்களிடம் மாணவர்களின் வயதை கேட்டறிந்த பிறகு மீண்டும பள்ளி தொடர்ந்து இயக்கப்படும் என்று சொன்னதுடன் அருகில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர் இளையபெருமாளை தற்காலிக ஆசிரியராக நியமித்து வகுப்புகளை நடத்த உத்தரவிட்டார்.
இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசால் மூடப்பட்ட பள்ளிகள் இல்லை என்ற நிலை உருவானது. இந்தநிலையில் சின்னப்பட்டமங்களம் பள்ளிக்கு சரியாக வராமல் பள்ளியை மூட காரணமாக இருந்த ஆசிரியரை கல்வித்துறை பணியிடைநீக்கம் செய்துள்ளனர். இதேபோல மற்ற 44 பள்ளிகளையும் திறக்க உள்ளூர் இளைஞர்களும் கிராம மக்களும் முயன்றால் மூடிய பள்ளிகளை மீண்டும் திறக்கலாம்.
பத்திரிகை நண்பர்களின் தொடர் முயற்சியால் பள்ளிகள் திறக்கப்பட்டதில் ஆசிரியர்களும் பாராட்டினார்கள்.