
நான்கைந்து நாட்களுக்குள் முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமை அறிவிக்கும் என பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதிமுக-பாஜக கூட்டணி அரசு விழா மேடையிலேயே மத்திய அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் உறுதி செய்யப்பட்டாலும், கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி மேலோங்கியுள்ளது. அதிமுக தலைமையில் தான் கூட்டணி என முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்து வருகிறார். அதேபோல், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என ஏற்கனவே அதிமுக தலைமை அறிவித்துள்ளது. ஆனால் பாஜக தமிழகத் தலைமையோ, முதல்வர் வேட்பாளர் குறித்து தேசியத் தலைமைதான் முடிவெடுக்கும் எனத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை புதுப்பேட்டையில் உள்ள பா.ஜ.க. நிர்வாகிகளைச் சந்திக்க நடிகை குஷ்பு சுந்தர் இன்று (02.01.2021) காலை வந்தார். அப்போது அப்பகுதியில் இருக்கும் பா.ஜ.க. கொடியை ஏற்றி, பொதுமக்களையும் சந்தித்தார். அப்பொழுது செய்தியாளர்களைச் சந்தித்த குஷ்பு, ''கூட்டணியைப் பொறுத்தவரைக்கும் ப்ரோட்டோகால் உள்ளது. ஒவ்வொரு இடத்திலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி இருக்கும் பொழுது தேசியத் தலைமைதான் முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கும். இதை நாங்கள் ஒரு ப்ரோட்டோகாலாக வைத்துள்ளோம். அந்த வகையில்தான் முதல்வர் வேட்பாளரை நாங்கள் அறிவிப்போம் எனச் சொல்லியிருக்கிறோம். எங்களைப் பொறுத்தவரை அதிமுகவுடன் கூட்டணி இருக்கிறது. கூடிய சீக்கிரத்தில், ஒரு நான்கைந்து நாட்களில் எல்லாத் தகவலும் டெல்லியில் இருந்து வந்துவிடும்'' என்றார்.