
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், மேற்பனைக்காடு கிராம மக்கள் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டு அரசு பள்ளியில் தங்கியுள்ளனர். கடந்த ஒரு வாரமாகவே அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் யாரும் வந்து பார்க்கவில்லை என்று கூறுகின்றனர்.
அவர்கள் கூறியதாவது, இந்த பகுதியில் அதிக சேதாரம் ஏற்பட்டுள்ளது. அனைத்து வீடுகளும் உடைந்து கிடக்கிறது. ஒரு வீட்டில் கூட மக்கள் இருக்க முடியாத சூழலில் உள்ளார்கள். மக்கள் எல்லோரும் இரவு நேரத்தில் இங்குதான் வந்து தங்கியுள்ளனர்.
இங்கு உள்ளவர்களுக்கு கோவை, சென்னையில் இருந்து சிலர் உதவிகளை வழங்கியுள்ளனர். அரசுக்கு என்ன சொல்கிறோம் என்றால், நீவாரண நிதி எப்ப வேண்டுமானாலும் கொடுங்கள். உடனடியாக தேவை பாதுகாப்பான அறன். மூன்று வேளை சாப்பாடு, சாப்பாடு இல்லாமல் குழந்தைகள் கஷ்டப்படுகிறார்கள். மாற்று உடை இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாமல் கஷ்டப்படுகிறார்கள்.
வீட்டில் உள்ள அனைத்து உடைமைகளும் பயன்படுத்த முடியாத அளவுக்கு கிடக்கிறது. மீண்டும் அங்கு சோறாக்க முடியாது. இதுவரைக்கும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள், ஆட்சியாளர்கள், அமைச்சர்கள் யாரும் இங்கு உள்ளவர்களை வந்து பார்க்கவில்லை. இங்கு உள்ளவர்களின் நிலைமையை புரிந்து கொண்டு அரசு உடனடியாக ஒரு நல்ல வழியை காட்ட வேண்டும் என்றனர்.