சென்னை பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் சந்துரு. இவரும் ஒரக்கடம் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணும் 7 வருடமாக காதலித்து வந்துள்ளனர். இந்த காதல் பெண்ணின் வீட்டாருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு தெரிந்து காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதோடு, பெண்ணின் குடும்பத்தார் மகளுக்கு மாப்பிள்ளை பார்க்கவும் தொடங்கியுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த உறவுக்கார இளைஞருக்கு திருமணம் செய்து வைக்க இருவீட்டாரும் முடிவு செய்தனர். இந்த திருமணத்தை நிறுத்த சந்துரு எவ்வளவோ முயன்றும் அது தோல்வியில் முடிந்துள்ளது.
ஜூலை 1ந்தேதி பெண் அழைப்பும், ஜூலை 2ந்தேதி திருமணம் என முடிவு செய்து வந்தவாசிக்கு சென்னையில் இருந்து மணப்பெண்ணை உறவுக்காரர்கள், நண்பர்கள் அழைத்துவந்துள்ளனர். இந்த தகவல் காதலன் சந்துருவுக்கும் தெரிந்துள்ளது. ஜூலை 1ந்தேதி தனியார் மண்டபத்தில் நடைபெற்ற ஊர்வலம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
ஜூலை 2ந்தேதி காலை திருமணம் அன்று விடியற்காலை வந்தவாசி வந்த சந்துரு, தனது காதலிக்கு திருமணம் நடைபெறவிருந்த மண்டபத்துக்கு வெளியே தன் மீது மண்ணெண்ணய் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டு தன்னையே எரித்துக்கொண்டுள்ளார். அவரின் அலறல் சத்தத்தை கேட்டு மண்டபத்தில் இருந்தவர்கள், அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்து வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். பெண் வீட்டரும் இந்த விவகாரத்தை கண்டுக்கொள்ளாமல் திருமணத்தை முடித்துக்கொண்டு கிளம்பிசென்றுள்ளனர்.
சென்னையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சந்துரு ஜூலை 9ந்தேதி இறந்துள்ளார். இறந்தவரின் உடலை போஸ்ட்மார்டம் செய்யவும், தற்கொலை என்பதால் வழக்குபதிவு செய்து எப்.ஐ.ஆர் கொண்டு வந்தால் தான் உடலை தருவோம் என மருத்துவமனையில் கூறியதால் வந்தவாசி வந்த சந்துருவின் தந்தை ஆறுமுகம் இதுக்குறித்து புகார் தந்தபின்பே இப்படியொரு சம்பவம் தங்களது பகுதியில் நடந்துள்ளதை கேட்டு அதிர்ந்து எப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர் போலீஸார்.