விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா, பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 13 ஆம் தேதி (13.07.2024) எண்ணப்பட்டன. இதனையடுத்து 20 சுற்றுகள் முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1 லட்சத்து 24 ஆயிரத்து 53 வாக்குகள் பெற்று 67 ஆயிரத்து 757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றிப் பெற்ற திமுகவின் அன்னியூர் சிவா எம்.எல்.ஏ.வாக இன்று (16.07.2024) பதவியேற்றுக் கொண்டார். சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சபாநாயகர் அப்பாவு அலுவலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினராக அன்னியூர் சிவா பதவியேற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் கராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை, விடுதலை சிறுத்கைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., கள்ளக்குறிச்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கௌதம சிகாமணி, சட்டமன்றப் பேரவைச் செயலாளர் கி. சீனிவாசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.