அண்ணாமலை பல்கலைக்கழக கணினி மற்றும் தகவல் அறிவியல் துறை, அமெரிக்கா இந்திய டீம் சியாட்டல் சேப்டர் நிறுவனத்தின் நிதியுதவியுடன் கிராமப்புறங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த 50 மாணவிகளுக்கு 3 மாத இலவச கணினி பயிற்சித் திட்ட தொடக்க விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு துறை தலைவர் புவியரசன் தலைமை தாங்கினார். திட்டத்தை கல்வியியல் புல முதல்வர் குலசேகரப்பெருமாள் பிள்ளை தொடங்கி வைத்து அன்றாட வாழ்வில் கணினிகளின் முக்கியத்துவத்தையும், பல்வேறு செயல்பாடுகளையும் எவ்வாறு திறமையாக கையாள வேண்டும் என்பது குறித்தும் மாணவ மாணவிகளிடம் பேசினார்.
இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் இந்தியா சியாட்டல் பிரிவு தலைவர் தேவராஜன், முத்துக்குமாரசுவாமி இணையவழி மூலம் சிறப்புரையாற்றினார்கள். திட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணகுமார், அமைப்புச் செயலாளர்கள் பாலமுருகன், சாய் லீலா உள்ளிட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
கணினி துறையில் மாலை நேரத்தில் இந்த பயிற்சி நடைபெறுகிறது. இதில் மாணவிகளுக்கு கணினி மூலம் எளிதில் சுயவேலைவாய்ப்பை அமைத்துக்கொள்ளவும் மற்றும் கணினி சார்ந்த பணிகளுக்கு செல்லும் வகையிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை முதன்மை ஆய்வாளர் ஜெயபிரகாஷ் மற்றும் அமைப்புச் செயலாளர் பிரவீனா செய்தனர்.