சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விளையாட்டு அரங்கில் டி.எம்.ஏ இன்டர்நேஷனல் சிலம்பம் பவுண்டேஷன் சார்பில் தேசிய அளவில் டிசம்பர் 26, 27 ஆகிய இரண்டு நாட்கள் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான சிலம்பம் மற்றும் சுருள் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு டிஎம்ஏ இன்டர்நேஷனல் சிலம்பம் பவுண்டேஷன் அமைப்பின் மலேசிய நாட்டு நிர்வாகிகள் நெடுஞ்செழியன், மயில்வாகனம், சிவக்குமார், விஜயசேரன் தலைமை தாங்கினார். போட்டியின் முதல் நாளில் பல்கலைக்கழக துணைவேந்தர் ராம.கதிரேசன் மற்றும் பதிவாளர் சீதாராமன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியைத் துவக்கி வைத்தனர்.
பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள மலேசியா நாட்டிலிருந்து 20 பேர், கேரளா மாநிலத்தில் இருந்து 10 பேர், கர்நாடகாவில் இருந்து 15 பேர், ஆந்திராவில் இருந்து 6 பேர், சென்னை, மதுரை, திண்டுக்கல், செங்கல்பட்டு, தர்மபுரி, திருவள்ளுவர் உள்ளிட்ட தமிழகத்தின் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களிருந்தும் மொத்தம் 5 வயது முதல் 25 வரை உள்ள மாணவ மாணவிகள் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
போட்டியின் 2-வது நாளில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் அண்ணாமலை பல்கலைக்கழக விளையாட்டு துறை முதல்வர் குலசேகர பெருமாள்பிள்ளை, துறை தலைவர் செந்தில்வேலன், டிஎம்ஏ பவுண்டேஷன் தமிழகத்தின் தலைவர் முருகபாண்டி, மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன், கடலூர் மாவட்ட தலைவர் ராஜதுரை, மாவட்ட செயலாளர் உத்திராபதி, மாவட்ட தொழில்நுட்ப பிரிவு பாஸ்கரன் மற்றும் பவுண்டேஷன் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு தேசிய அளவில் வெற்றி பெற்ற சிதம்பரம் எம்ஜிஆர் மற்றும் தளிர் சிலம்பப் பள்ளிக்கு முதல் பரிசையும், புவனகிரியில் உள்ள தமிழர் சிலம்பப் பள்ளிக்கு இரண்டாம் பரிசையும் வழங்கினார்கள். இதில் ஏப்ரல் மாதத்தில் மலேசியா நாட்டில் நடைபெறும் போட்டியில் உலக அளவிலான போட்டியில் கலந்துகொள்ள 150-க்கும் மேற்பட்டவர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.