கடந்த 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா தமிழக முதல்வராக பதவியில் இருந்தபோது அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், சிகிச்சை பலனளிக்காத காரணத்தால் அவர் மறைந்துவிட்டதாக சொல்லப்பட்டது. இருப்பினும், அவரது மரணம் தொடர்பான பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு ஆணையம் அமைக்கப்பட்டது. சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு 600 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை சமீபத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நீதிபதி ஆறுமுகசாமி அளித்தார். ஜெ.வின் மரணம் குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பும் வகையில் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக சசிகலா, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நான்கு பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை, “ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் இரண்டு மூன்று விஷயங்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அதில் அன்றைய சுகாதரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், அந்த ஆணையத்தில் ஒரு விஷயத்தை சொல்கிறார். ‘ஜெயலலிதாவை வெளிநாடு கொண்டு செல்வதில் தவறில்லை. அது அரசின் முடிவு. ஆனால் இந்தியாவில் இருக்கக்கூடிய சிறந்த மருத்துவர்கள், எய்ம்ஸ், அப்பல்லோ மருத்துவர்கள், அரசு மருத்துவர்கள் எல்லாம் இணைந்து குழுவாக இருக்கிறார்கள்’ என்று தெரிவித்துள்ளார். இந்த வார்த்தைகளை ட்விஸ்ட் செய்து அரசியலாக்கி பார்த்தால் யாரும் (அதிகாரிகள்) ஒரு முடிவை எடுக்க அஞ்சுவார்கள். தமிழ்நாட்டில் எந்த ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியும், ஐ.பி.எஸ். அதிகாரியும் வேலை செய்ய மாட்டார்கள். சில இக்கட்டான சூழ்நிலைகளில் சில துணிச்சலான முடிவுகளை எடுத்துதான் ஆகவேண்டும்.
இந்த அறிக்கையில் எங்கேயும் புதியதாக ஒரு ஆதாரத்தை நாங்கள் பார்க்கவில்லை. பொத்தாம் பொதுவாக சில கருத்துகளை தெரிவித்துள்ளனர். இதனை பாஜக தற்போதைக்கு ஏற்றுக் கொள்ளவில்லை. காரணம், சொல்லியிருக்கும் கருத்துக்கு ஆதாரங்கள் இல்லை.
மருத்துவம் தொடர்பாக ஆராய்ந்து சொல்ல சிறந்த மருத்துவர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். அவர்கள் எய்ம்ஸ் மருத்துவர்கள். அவர்கள் ஜெயலலிதாவுக்கு கொடுத்த மருத்துவம் சரிதான் என்று சொல்லியிருக்கும்போது, நம் நீதியரசர் அதுபோன்ற மருத்துவம் சார்ந்த விஷயங்களுக்குள் சென்று மருத்துவம் குறித்து சொல்வதை எந்த அளவுக்கு இந்த சமுதாயம் ஏற்றுக் கொள்ளும் என்பதுதான் இங்கே கேள்வி. அதுதான் எங்கள் கருத்தும். இது அரசியல் நுழைந்த அறிக்கையாகவே பார்க்க முடிகிறது. உண்மையைக் கண்டறியும் அறிக்கையாக எங்களுக்கு தெரியவில்லை” என்று தெரிவித்தார்.