Skip to main content

‘போலி டாக்டர் பட்டம்’ - சர்ச்சை குறித்து அண்ணா பல்கலை. துணைவேந்தர் பேட்டி

Published on 01/03/2023 | Edited on 01/03/2023

 

nn

 

அண்மையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் தனியார் நிறுவனம் சார்பில் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டது. இதில் இசையமைப்பாளர் தேவா, நடன இயக்குநர் சாண்டி, யூடியூப் பிரபலங்கள் கோபி, சுதாகர் உள்ளிட்ட பலருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. விழாவிற்கு வராத நடிகர் வடிவேலுக்கு வீட்டிற்கே சென்று டாக்டர் பட்டத்தைக் கொடுத்துள்ளனர்.

 

nn

 

இந்நிலையில், நடந்தது போலி டாக்டர் பட்டமளிப்பு விழா என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் அதன் துணைவேந்தர் வேல்ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''அண்ணா பல்கலை.யில் போலி டாக்டர் பட்டம் வழங்கியது தொடர்பாக போலீசில் புகாரளித்துள்ளோம். தனியார் அமைப்பு நடத்திய போலி பட்டமளிப்பு விழாவிற்காக அண்ணா பல்கலைக்கழக அரங்கத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.

 

அண்ணா பல்கலைக்கழகம் புனிதமான இடம். இதுபோன்ற தவறான செயல் நடைபெற்றதற்கு வருந்துகிறோம். முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம் கடிதம் அளித்ததாகக் கூறியதால் பட்டமளிப்பு விழாவிற்கு அனுமதி கொடுத்தோம். அவரிடம் அண்ணா பல்கலை.யில் நடக்கும் நிகழ்ச்சி என்று சொன்னதால் வந்திருப்பார் என்று தோன்றுகிறது. நிகழ்ச்சி நடத்திய தனியார் அமைப்புக்கும் பல்கலைக்கழகத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இனி தனியார் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கிடையாது'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்