எம்.டெக். படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், பொருளாதாரத்தில் நலிந்த உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீட்டை அமல்படுத்திய அண்ணா பல்கலைக்கழகத்தின் உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி முன்பு இன்று (10/03/2021) விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் நாராயணன், "பொருளாதாரத்தில் நலிந்த உயர் வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை ஏற்கவில்லை" எனத் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி, "பொருளாதாரத்தில் நலிந்த உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு அமல்படுத்தியது ஏன்? மாநில அரசு ஏற்றுக்கொள்ளாத நிலையில், எம்.டெக் படிப்பில் 10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியது ஏன்? மாணவர் சேர்க்கையில் தொடர்ந்து ஏன் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள்? கடந்த ஆண்டைப் போல் 49.5% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தாதது ஏன்?எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, மத்திய அரசுக்கும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் கண்டனம் தெரிவித்தார். மேலும், மாநில அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக அண்ணா பல்கலைக்கழகம் முடிவு எடுக்க முடியாது" எனத் தெரிவித்தார். இந்த வழக்கு தொடர்பாக மார்ச் 12- ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.