Skip to main content

இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மையம் - மழை வந்தால் பள்ளிக்கு விடுமுறை : கண்டுகொள்ளாத அதிகாரிகள்

Published on 09/11/2018 | Edited on 09/11/2018
Damaged building



நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 91 ஆயிரத்தில் மராமத்து செய்த அங்கன்வாடி கட்டிடம் இடிந்து கொட்டுவதால் ஒரு வீட்டின் தாழ்வாரத்தில் வகுப்புகளை நடத்தி, மதிய உணவு வழங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பழுதான கட்டிடத்தை மாற்றக் கோரி பெற்றோர்கள் குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்ப மறுக்கின்றனர். அதே பகுதியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியின் மேற் கூரையும் இடிந்து கொட்டிக் கொண்டிருப்பதால் மழை வந்தால் பள்ளிக்கு விடுமுறை விடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. 
 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் மேற்பனைக்காடு வடக்கு கிராமத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ஏராளமான குழந்தைகளுடன் புளியமரத்தடியில் தொடங்கப்பட்ட அங்கன்வாடி மையத்திற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு புதிய கட்டிடம் கட்டப்பட்டு அங்கு மாற்றப்பட்டது. 

 

Damaged building


அந்த கட்டிடம் அடிக்கடி பழுதாகி உடைந்தது. அதனால் கடந்த சில ஆண்டுகளுக்குள் 2 முறை பழுது பார்க்கப்பட்டுள்ளது. கடைசியாக 2013 – 2014 ம் ஆண்டில் ரூ. 91 ஆயிரத்திற்கு சீரமைப்புப் பணிகள் நடந்துள்ளது. ஆனால் சமையல் கூடம், குழந்தைகள் படிக்கும் இடங்களின் மேற்கூரை சிமென்ட் பூச்சுகள் அடிக்கடி உடைந்து கொட்டியுள்ளது.

அதனால் குழந்தைகளை அந்த கட்டிடத்தில் தங்க வைத்து பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது, மழை காலங்களில் மின்கசிவு ஏற்பட்டு சுவர்களிலும் மின்சாரம் பாய்ந்துள்ளது. மேலும் மழை காலங்களில் தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்ததால் சுமார் 30 குழந்தைகள் வந்த நிலையில் அப்படியே பாதியாக குறைந்துவிட்டது.

 

Damaged building


அதன் பிறகு கிராம மக்கள் மற்றும் அதிகாரிகள் அறிவுறுத்தல்படி அங்கன்வாடி மையத்தை அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் தாழ்வாரத்தில் வைத்து நடத்த தொடங்கியுள்ளனர். பல மாதங்களாக தாழ்வாரமே குழந்தைகளின் கல்விக் கூடமாக செயல்பட்டு வருகிறது. அதே வீட்டில் சமையல் செய்து குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. மேலும் இரு அங்கன்வாடி மையங்களுக்கு ஒரே பணியாளர் என்பதால் உணவு சமைப்பதிலும், பாடங்கள் நடத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கட்டிடம் பழுதாகி விபத்து எற்படும் நிலையில் உள்ளதால் அந்தப் பகுதியில் இருந்து குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்பிய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டனர். இதனால் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. 

பழுதான அங்கன்வாடி கட்டிடத்தை மாற்றி புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று கிராம மக்கள் பல முறை கோரிக்கை வைத்தும் பல வருடங்களாக அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. அதனால் தான் குழந்தைகளை அனுப்புவதை நிறுத்தி வருகிறோம் என்றனர் அந்த பகுதி பொதுமக்கள்.

 

Damaged building


அதே போல தான் அதே மேற்பனைக்காடு வடக்கு, மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள அரசு பள்ளிகளின் நிலையும் உள்ளது. 2009 ம் ஆண்டு கட்டித் திறக்கப்பட்ட அரசு பள்ளி வகுப்பறை கட்டிடம் மேற்கூரைகள் உடைந்து துரு ஏறிய கம்பிகள் நீட்டிக் கொண்டிருக்கிறது. மழை பெய்ய தொடங்கினால் மேலிருந்து தண்ணீர் தொட்டுவதால் மாணவர்கள் வகுப்பறையில் அமர முடியாது. அதனால் பள்ளியை விடுமுறை விட வேண்டிய அவலநிலையும் எற்பட்டுள்ளது. 

 

இப்படித் தான் மேற்பனைக்காடு கிழக்கு அரசு பள்ளியும் உள்ளது. அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தாச்சு. சிவகங்கை தொகுதி எம்.பி. செந்தில்நாதனிடம் வகுப்பறை கட்டிடம் வேண்டும் என்று நேரில் சென்று கோரிக்கை மனு கொடுத்தோம். கட்டிடம் கட்ட நிதி ஒதுக்குவதாக சொன்னார் ஆண்டுகள் தான் ஓடிவிட்டது. கட்டிடம் தான் வரவில்லை. அதனால குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவே அச்சமாக உள்ளது என்கின்றனர் அப்பகுதி இளைஞர்கள். 

ஆபத்தான கட்டிடங்களை உடனே மாற்றினால் விபத்துகளை தடுக்க முடியும். ஆனால் அதிகாரிகளும் அரசாங்கமும் விபத்து நடக்கும் வரை காத்திருந்து விபத்துகள் நடந்த பிறகே நடவடிக்கை எடுக்க துடிப்பது வழக்கமாகவே உள்ளது. கும்பகோணம் விபத்து அதிகாரிகளுக்கும், அரசுக்கும் நினைவிருந்தால் நல்லது.


 

சார்ந்த செய்திகள்