வன்னியர் அறக்கட்டளை சொத்துகளை நாங்கள் அபகரித்தோம் என்று குற்றம் சாட்டும் திமுக அதை நிரூபிக்கத் தயாரா? என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலம் மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் கே.ஆர்.எஸ். சரவணன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எம்பி, சேலத்தில் சனிக்கிழமை (ஏப்ரல் 6, 2019) இரவு பரப்புரை செய்தார். கொண்டலாம்பட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது:

அதிமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றால், மத்தியில் மோடியின் நல்லாட்சி தொடரும். சாதாரண விவசாயி என்ற நிலையில் இருந்து முதல்வராக உயர்ந்த எடப்பாடி பழனிசாமி, மக்களுக்கான நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதில் இந்தியாவிலேயே சிறந்த திட்டமான கோதாவரி - காவிரி நதிகள் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற முதல்வர் பாடுபட்டு வருகிறார்.
கோதாவரி திட்டத்தை நிறைவேற்றினால் மேட்டூர் அணையில் எப்போதும் தண்ணீர் இருக்கும். தமிழகத்தில் தண்ணீர் பஞ்சமே இல்லாத நிலை வரும். திமுகவில் கட்டப்பஞ்சாயத்து, பெண்களை கடத்துவது, கொலை, கொள்ளை, வழிப்பறி, அராஜகம் என கூட்டணியாக அமைந்துள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது, அதிமுக கூட்டணியால்தான் வழங்க முடியும்.
மேடைதோறும் கொச்சையாக, தரம் தாழ்ந்து பேசி வருபவர் ஸ்டாலின். திருமாவளவன், நிச்சயமாக மக்களால் தோற்கடிக்கப்படுவார். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இப்போதே கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். அவர்கள் அதிகாரத்திற்கு வந்தால் என்ன நடக்கும் என சிந்தித்து பார்க்கவும்.
திமுக கூட்டணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ள ஜெகத்ரட்சகன், இலங்கையில் 26 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளார். தமிழகத்தில் ஏன் முதலீடு செய்யவில்லை? இதுகுறித்து ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் ஆகியோர் என்ன பதில் சொல்லப் போகின்றனர்? இனிமேல் ஈழ பிரச்னை குறித்து திமுக கூட்டணியினர் பேச தகுதியில்லை. திமுகவில் யார் அதிக பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சியாக நடக்காமல், ஒரு நிறுவனமாக செயல்படுகிறது.
திமுகவில் கலைஞரின் குடும்பத்தினர் மட்டுமே உள்ளனர். தமிழகத்தில் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம் திமுகதான். நீட் தேர்வுக்கு கையெழுத்திட்டவர் ஸ்டாலின். இப்போது அதை ரத்து செய்வதாக நாடகம் ஆடி வருகிறார். ஸ்டெர்லைட் நிறுவனத்தை துவக்கி வைத்தவர் கருணாநிதி. காவிரி பிரச்னைக்கு காரணமானவர்கள் திமுகவினர். ஹைட்ரோகார்பன் திட்டத்தை கொண்டு வந்தவர் ஸ்டாலின். ஆனால் இப்போது இந்த திட்டத்தை ரத்து செய்வதாக மேடைக்கு மேடை பொய் கூறி மக்களை ஏமாற்றி வருகிறார்.
வன்னியர் சொத்துகளை அபகரித்துவிட்டதாக எங்களைப் பார்த்து ஸ்டாலின் பொய்யாக பரப்புரை செய்து வருகிறார். எனது குடும்பத்தினரின் அனைத்து சொத்துகளையும் வெளிப்படையாக கொண்டு வந்து கொடுக்கிறேன். அதில் ஒரு சதுர அடியாவது வன்னியர் அறக்கட்டளை சொத்துகளை அபகரித்திருப்பதாகக் கண்டறிந்து நிரூபிக்க தயாரா? அப்படி நிரூபிக்க முடியவில்லை என்றால் திமுக தலைவர் பதவியை துறக்க தயாரா? திமுக தலைவர் பதவியில் இருந்து ஸ்டாலின் விலக வேண்டும் என்றுதான் அந்தக்கட்சியில் இருப்பவர்களே விரும்புகின்றனர்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார்.