Skip to main content

அன்புமணி ராமதாஸ் வழக்கு - பொதுமக்களை துன்புறுத்தக்கூடாது என்று நீதிபதி கண்டிப்பு

Published on 21/09/2018 | Edited on 21/09/2018
anbumani

 

சென்னை - சேலம் 8 வழி சாலை திட்டத்திற்கு சுற்றுச்சுழல் அனுமதி வழங்கவில்லை என்றால் திட்டத்தை  தொடர மாட்டோம் என மத்திய அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னை - சேலம் இடையேயான 8 வழி சாலை திட்டத்திற்கு தடை விதிக்க கோரி பாமக எம்பி அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தனர். 

 இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு  உத்தரவின்படி, 8 வழி சாலை திட்டத்தை செயல்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகளை அட்டவணையாக மத்திய அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. 

அதை பார்த்த நீதிபதிகள், 8 வழி சாலை திட்டத்திற்கான சுற்றுச்சுழல் அனுமதி பெறுவதற்கு முன்பே நிலங்களை அளவீடு செய்யும் பணிகள் தொடங்கியது குறித்தும்,  மக்களிடம் கருத்து கேட்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கும் போது, நிலங்களை உட்பிரிவு செய்தது ஏன் எனவும் கேள்வி எழுப்பினர். 

 

8 வழி சாலை திட்டத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் மட்டுமே தற்போது நடைபெற்று வருவதாகவும், ஒருவேளை இத்திட்டதிற்கு சுற்றுசுழல் அமைச்சகம் அனுமதி வழங்காவிட்டால்  திட்டத்தை  தொடர மாட்டோம் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல, தர்மபுரி மாவட்டம் அரூரில் சட்டவிரோதமாக மரங்களை வெட்டியவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய கோரி அரசு தரப்பில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக 1,200 மரங்களை அரசு நடவுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

நீதிமன்ற உத்தரவை மீறி செய்யாறு பகுதியில் காவல்துறையால் மக்கள் துன்புறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, திட்ட பணிகளின் போது பொது மக்களை துன்புறுத்த கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், இதுகுறித்து மாவட்ட சட்ட பணிகள் அதிகாரி கண்காணிப்பது குறித்து செப் 24-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

 

சார்ந்த செய்திகள்