தமிழக அரசு மாணவர்கள் நலனில் அக்கறை இல்லாமல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த திட்டமிட்டிருக்கிறது. வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த இரண்டு லட்சம் பேர் எப்படித் தேர்வு எழுத முடியும்" என ஆவேசமாக கேள்வி எழுப்புகிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்.
ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்து அன்றாட உணவுக்கு வழியின்றி தவிக்கும் கூலித் தொழிலாளர்களுக்கு குடும்ப அட்டைக்கு 10 ஆயிரம் ரூபாய் வீதம் நிவாரணம் வழங்க வலியுறுத்தி டெல்டா மாவட்டம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நாகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தலைமையில் போராட்டம் நடந்தது. கருப்புக்கொடியைக் கையில் ஏந்தியபடி மத்திய, மாநில அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய முத்தரசன், "தமிழக மாணவர்களின் நலனில் அக்கறை இல்லாமல் 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது கண்டனத்திற்குரியது. சென்னையில் மட்டும் 6 லட்சம் பேர் தேர்வு எழுத முடியாத நிலையில், வெளிமாநில மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சம் பேர் எப்படிச் சென்னை வந்து தேர்வு எழுத முடியும்? ஜூன் 12- ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதாக அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. அதே வேளையில் இன்னும் மிச்சமிருக்கும் 20 நாட்களுக்குள் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள முடியுமா? என்பது கேள்விக்குறியானதே. ஆக குடிமராமத்துப் பணிகள் என்பது ஆளுங்கட்சியினர் போனஸ் பெறுவதற்காகவே கொண்டுவந்த திட்டம் என்பது தற்போதும் வெட்ட வெளிச்சமாகிவிட்டது. அந்த நிதியைப் பங்கு போட்டு கொள்வதை நிறுத்தி வெளிப்படையாக மராமத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.