Skip to main content

அமமுக பிரமுகர் கடத்தி கொலை; இருவர் கைது

Published on 17/01/2023 | Edited on 17/01/2023

 

AMMK Member passes away police arrested two

 

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரம் கொசப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பரசுராமன் மகன் கோதண்டம் (68). அமமுக கட்சியில் மாவட்ட அவைத்தலைவராக உள்ளார். மேலும் பட்டு சேலை உற்பத்தியாளராகவும், பைனான்சிரியராகவும் உள்ளார். இவரது மனைவி குமாரி, மகன்கள் பாஸ்கர், சுரேஷ், மகள் பாரதி ஆகியோர் உள்ளனர்.

 

இவர் கடந்த 05.01.2023 அன்று முதல் காணவில்லை என்று கடந்த 07.01.2023 அன்று ஆரணி நகர காவல் நிலையத்தில் புகார் செய்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார் காணாமல் போன கோதண்டம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வந்தனர். பின்னர் டி.ஐ.ஜி. முத்துசாமி உத்தரவின்பேரில் எஸ்.பி. கார்த்திகேயன் 5 தனிப்படைகளை அமைத்து தேடுவதற்காக உத்தரவிட்டார்.

 

பின்னர் தீவிர விசாரணையில் கோதண்டம் ஆரணி அடுத்த ஆகாரம் கிராமத்தைச் சேர்ந்த பாரி மகன் சரவணன்(33) என்பவருக்கு ஒரு கோடியே 25 லட்ச ரூபாய் தந்துள்ளதாக தெரியவந்தது. கொடுத்த பணத்தை கோதண்டம் கேட்டுவந்துள்ளார். இந்நிலையில் சரவணன் தனது ஓட்டுநர் அருணகிரி சத்திரம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் குமரன்(37) என்பவரிடம் கோதண்டம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வருகிறார் என்று புலம்பியுள்ளார். இதற்கு குமரன் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றும், அதற்காக முன்பணமாக ரூ. 2 லட்சத்தையும் வாங்கியுள்ளார். இந்நிலையில், குமரன் தனக்கு வேண்டப்பட்ட சென்னை குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த குட்டி என்கிற தணிகாசலம் (44), நேருஜி (32) ஆகியோரிடம் பணத்தை கொடுத்து கோதண்டத்தின் போட்டோ மற்றும் செல்நம்பரை  கொடுத்து தீர்த்து கட்டுமாறு கூறியுள்ளார்.

 

இந்நிலையில் தணிகாசலம், நேருஜி ஆகிய இருவரும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீதர், வினோத், வீரமணி ஆகியவர்களை தொடர்பு கொண்டு கோதண்டம் என்பவரை தீர்த்து கட்ட வேண்டும் என்று கூறி திட்டம் போட்டுள்ளனர். அதன்படி ‘காஞ்சிபுரம் பகுதியில் இடம் உள்ளது; விற்பனை செய்ய வேண்டும்’ என்று கூறி கடந்த ஜனவரி 5ம் தேதி கோதண்டத்தை செய்யாறு வரை வர வைத்துள்ளனர்.  அங்கிருந்து காரில் ஏற்றிக்கொண்டு காஞ்சிபுரம் வழியாக சென்றுள்ளனர். போகும் வழியில் ஏற்கனவே திட்டம் போட்டது போல் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் நிறுத்திவிட்டு கோதண்டத்தை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். 

 

பின்னர் வாலாஜாபாத், ஒரகடம், படப்பை, மண்ணிவாக்கம், மீஞ்சூர் வழியாக ஆந்திர மாநிலம் சத்தியவேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெலுங்கு கங்கா கால்வாயில் கோதண்டத்தின் பிரேதத்தை வீசிவிட்டு தப்பியோடியுள்ளனர். இரண்டு நாட்கள் கழித்து கோதண்டம் உடல் கால்வாயில் மிதந்துள்ளது. சத்தியவேடு போலீசார் பிரேதத்தை மீட்டு போஸ்ட் மார்டம் செய்து புதைத்துள்ளனர். குட்டி (எ) தணிகாசலம், நேருஜி ஆகிய இருவரிடமும் கொலை செய்ததற்கான மீதி பணம் 4 லட்சம் ரூபாயை 07.01.2023 அன்று சரவணன் கொடுத்துள்ளார்.

 

இந்நிலையில், போலீசாரின் தீவிர விசாரணையில் கொலைகாரர்களை நெருங்கும் தகவல் அறிந்த சரவணன் ஆந்திராவில் குட்டி(எ) தணிகாசலம், நேருஜி ஆகிய இருவரையும் கோர்ட்டில் சரணடைந்து விடுங்கள் என் பெயரை சொல்ல வேண்டாம் என்று கூறியுள்ளார். பிணம் ஆந்திர மாநிலத்தில் உள்ள தகவல் அறிந்த போலீசார் அப்பகுதி காவல்துறை உதவியுடன் பிணத்தை தோண்டி எடுத்து கோதண்டத்தின் மகனிடம் ஜனவரி 14ம் தேதி ஒப்படைத்தனர்.

 

கோர்ட்டில் சரணடைய வந்த இருவரையும் ஆந்திர போலீசார் அழைத்து சென்று கோதண்டனை கொலை செய்தது குறித்து வழக்குப்பதிவு செய்து ஆரணி போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர். ஜனவரி 15ம் தேதி சரவணன், குமரன், குட்டி (எ) தணிகாசலம், நேருஜி ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் கொலைக்கு உடந்தையாக இருந்த தலைமறைவாக உள்ள ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீதர், வினோத், வீரமணி ஆகிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்