ஆத்தூர் ஒன்றியத்தில் உள்ள பாளையன்கோட்டை ஊராட்சியில் பாளையன்கோட்டை, கூலம்பட்டி, பிரவான்பட்டி, காமன்பட்டி, லெட்சுமிபுரம், இந்திரா காலனி, திம்மிராயபுரம், கந்தசாமிபுரம் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
தற்போது புது வருடத்திற்கான நூறு நாள் வேலைத்திட்ட பயனாளிகள் புதிய அட்டை கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்றால் ஊராட்சி மன்றத் தலைவர் அழகுமலை மற்றும் ஊராட்சி செயலர் முத்துப்பாண்டி ஆகியோர் நூறு நாள் அட்டை கேட்கும் பயனாளிகள் ஒரே வீட்டில் இருந்தாலும் இரண்டு வரிகள் போட வேண்டும் என்று கூறியதோடு, ரூ.600, ரூ.1000 வரி போட்ட வீடுகளுக்கு ரூ.2500, ரூ.3000 வீட்டு வரி கட்ட வேண்டும் என சொல்லியதாக பொதுமக்கள் புகார் செய்கின்றனர். இதுதவிர தனியாக இருக்கும் விதவைகள் மற்றும் முதியோர் நிவாரண உதவித்தொகை வாங்கும் முதியோர்களுக்கு நூறு நாள் வேலைத்திட்ட அட்டை கொடுக்க மாட்டோம் என கூறியுள்ளனர். இதனால் நூறு நாள் வேலைத்திட்ட பயனாளிகள் பேருந்தை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் சமரசத்திற்கு பின்பு மறியலை கைவிட்டனர். ஆனால், மீண்டும் ஊராட்சி நிர்வாகம் 100 நாள் வேலைத்திட்ட பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க மறுத்ததால் மீண்டும் பேருந்தை சிறை பிடித்து ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
இதுசம்பந்தமாக பாளையன்கோட்டை ஊராட்சியில் தொடர்ந்து நடைபெறும் முறைகேடுகள் குறித்து தி.மு.க. ஒன்றியக் குழு உறுப்பினர் பாப்பாத்தி கூறுகையில், “பாளையன்கோட்டை ஊராட்சியில் ஊராட்சி செயலராக முத்துப்பாண்டி பொறுப்பேற்ற நாள் முதல் முறைகேடுகள் அதிகரித்து வருகிறது. சொந்த வீடு இருப்பவர்களுக்குத்தான் நூறு நாள் வேலைக்கான அட்டை கொடுக்கப்படும் என ஊராட்சி செயலர் முத்துப்பாண்டி கூறி வருவது நூறு நாள் வேலைத்திட்டத்தையே முடக்குவது போல் உள்ளது. இதுகுறித்து திட்ட இயக்குநர் தகுந்த விசாரணை செய்ய வேண்டும். மேலும், இதுகுறித்து கூட்டுறவுத்துறை அமைச்சரிடம் பாளையன்கோட்டை ஊராட்சி மக்கள் புகார் செய்ய முடிவு செய்துள்ளோம்” என்றார்.
பொதுமக்களின் சாலை மறியல் மற்றும் புகார்கள் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஏழுமலையானிடம் கேட்டபோது, “கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சீனியம்மாள் என்ற வார்டு உறுப்பினர் பாளையன்கோட்டை ஊராட்சியில் நடைபெறும் நூறு நாள் வேலைத்திட்டம் குறித்து புகார் அளித்துள்ளார். விசாரணை செய்து வருகிறோம். இப்போது பயனாளிகள் சாலை மறியல் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டதாக தகவல் வந்துள்ளது. முறையாக விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். முதற்கட்டமாக பழைய பயனாளிகள் அனைவருக்கும் எவ்வித இடையூறுமின்றி நூறு நாள் வேலைக்கான அட்டை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன்” என்றார்.
பாளையன்கோட்டை ஊராட்சியில் ஊராட்சிச் செயலரின் அறிவிப்பால் பொதுமக்கள் சாலை மறியல் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் அளவிற்கு சென்றுவிட்டனர். ஊராட்சிச் செயலரை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்றும், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சித் தலைவர் போல் செயல்படும் பெண் ஒருவரை அலுவலகத்தில் நுழைய விடக்கூடாது என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செம்பட்டி காவல் ஆய்வாளர் முன்னிலையில் பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. தமிழகத்தித்ல உள்ள ஊராட்சிகளில் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் 100 நாள் வேலைத்திட்டத்தில் பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது இதுவே முதன் முறை. மாவட்ட ஆட்சியர் விசாகன் மற்றும் திட்ட இயக்குநர் இதுகுறித்து முறையான விசாரணை செய்யாவிட்டால் பாளையன்கோட்டை ஊராட்சியில் 100 நாள் வேலைத்திட்டம் முடங்கிவிடும்.