காட்டுமன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காட்டுமன்னார்குடி அருகே உள்ள கொளக்குடி, ஓமாம்புலியூர், இலுப்பைத்தோப்பு, திருமூலஸ்தானம், கோயில் பத்து, அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட இந்து மலைக்குறவர் மக்கள் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அடிப்படை வசதிகள் இன்றி மிகவும் சிரமத்துடன் ஒரே குடிசைக்குள் 2 அல்லது 3 குடும்பங்களுடன் வசித்து வருகிறார்கள்.
இவர்களுக்கு குடி மனைப்பட்டா, அவர்களின் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு சாதி சான்றிதழ், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்ட அடையாள அட்டைகளை வழங்கிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனு கொடுத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் தேன்மொழி தலைமை தாங்கினார்.
மாவட்ட குழு உறுப்பினர் பிரகாஷ், வட்ட குழு உறுப்பினர்கள் விமலகண்ணன், பொன்னம்பலம், தினேஷ்பாபு, சிங்கார வேலு, கிளை செயலாளர்கள் தேசிங்கு தனபால் நீலமேகன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட இந்து மலைக்குறவர், இருளர் இன மக்கள் கலந்து கொண்டு மேற்கொண்டு கோரிக்கைகள் குறித்து கோசங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து கோரிக்கைகள் குறித்தும் கடந்த சில நாட்களுக்கு முன் இலுப்பைதோப்பு பகுதியில் வசிக்கும் மலைகுறவர்கள் 10 குடும்பத்தினரைத் தாக்கிய ஆதிக்க சாதியினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காட்டுமன்னார்குடி வட்டாட்சியர் ராமதாஸிடம் மனு அளித்தனர்.