நாமக்கல்லில் உணவகம் ஒன்றில் சிக்கன் ரைஸ் வாங்கிச் சென்று சாப்பிட்ட இரண்டு பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட சம்பவத்தில் சிக்கன் ரைஸில் பூச்சி மருந்து கலந்திருப்பது ஆய்வில் தெரிய வந்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நாமக்கல்லைச் சேர்ந்த பகவதி என்பவர் நேற்று முன்தினம் இரவு ஏழு சிக்கன் ரைஸ்களை உணவகம் ஒன்றில் ஆர்டர் செய்து பார்சல் வாங்கிக் கொண்டு சென்று வீட்டில் உள்ளவர்களுடன் சாப்பிட்டுள்ளார். இந்நிலையில் அதை சாப்பிட்ட பகவதியின் 72 வயது தந்தை மற்றும் மகள் ஆகிய இருவருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருவர் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
குறிப்பிட்ட அந்த கடையில் 80க்கும் மேற்பட்டோர் சிக்கன் ரைஸ் சாப்பிட்டுள்ளார்கள். அவர்கள் யாருக்கும் உடல் நலம் பாதிக்கப்படாத நிலையில் இவர்கள் இரண்டு பேருக்கு மட்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. புட் பாய்சன் ஏற்பட்டால் வயிற்றுப்போக்கு அல்லது வயிற்று வலி தான் ஏற்படும் ஆனால் இவர்கள் மருத்துவமனைக்கு வரும் பொழுது கடுமையான சோர்வுடன் உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்துள்ளனர் என மருத்துவர்கள் தரப்பில் சொல்லப்பட்டது. தொடர்ந்து. மருத்துவர்கள் சிகிச்சை அளித்த நிலையில் அவர்கள் சாப்பிட்ட சிக்கன் ரைஸ் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதில் சிக்கன் ரைஸில் பூச்சி மருந்து கலக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. பூச்சி மருந்து எங்கு யாரால் கலக்கப்பட்டது என்பது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் பூச்சி மருந்து கலந்த சிக்கன் ரைஸ் சாப்பிட்ட சண்முகநாதன் 972) என்ற முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.