திருச்சி மாநகரில் உள்ள 68 வார்டுகளிலும் அமமுகவினர் கபசுரக்குடிநீர், கையுறை மற்றும் முககவசம் ஆகியவற்றை வீடு வீடாக சென்று விநியோகித்துள்ளனர்.
திருச்சியில் கரோனா பரவல் உச்சநிலையை அடைந்து வருகிறது. தளர்வு நிலையில், ஆறாவது ஊரடங்கு நடைமுறையில் உள்ளது, திருச்சி மாவட்ட நிர்வாகம் எடுத்துவரும் நடவடிக்கையால் தொற்றின் தீவிரம் குறைந்தபாடில்லை.
முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, இல்லங்களில் கை கழுவுவது என அனைத்து மட்டங்களிலும் அறிவுறுத்தப்பட்டு வந்த நிலையில், மருத்துவர்கள் காவலர்கள் செவிலியர்கள் நகை, வைர, ஜவுளிக் கடை முதலாளிகள் ஊழியர்கள் என நோய்த்தொற்று பரவிக்கொண்டே வருகிறது.
திருச்சி கடைவீதியில் ஒட்டுமொத்தமாக சுமார் 28 தெருக்களை அடைத்து மூன்று வார்டுகளை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்தது நிர்வாகம். இந்நிலையில் திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் வீடு, வீடாக வீதி, வீதியாக கபசுரக்குடிநீரை விநியோகிக்கும் நிகழ்ச்சியினை மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் நடத்தினார். திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம், அரியமங்கலம், பொன்மலை, கோ-அபிஷேகபுரம் ஆகிய நான்கு கோட்டங்களில் 65 வார்டுகளிலும் காலையிலேயே வீட்டுக்கு வீடு சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனத்தில் கபசுர குடிநீர் வழங்கினார்கள். கபசுர குடிநீர் கொடுத்தனர். இத்தோடு வெப்பமானி மூலம் உடல்நிலை பரிசோதித்தனர்.
இதை அடுத்து ஒவ்வொருவருக்கும் முகக்கவசம், கையுறை வழங்கினர். சைக்கிளின் பின்புறம் கட்டியிருந்த டீ கேனில் வீடு,வீடாக கபசுரக் குடிநீர் விநியோகிக்கும் ஸ்டிக்கர் ஒட்டினர். அமமுகவினர் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் ஒரே நேரத்தில் 65 வார்டு பொதுமக்களுக்கும் கபசுரக்குடிநீரினை வழங்கினார்கள். ஆயுஷ் அமைச்சகம் சார்பில் சித்த மருத்துவத்தில் கபசுரக் குடிநீர், நிலவேம்பு கஷாயம், ஆடாதொடை, மணப்பாகு போன்ற மருந்துகளையும் ஹோமியோபதி ஆர்சனிக் ஆர்வம் போன்ற மருந்துகள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதால் வழங்கலாம் என்று பரிந்துரை செய்தது. இப்பரிந்துரையை ஒவ்வொரு மாநில அரசுகளும் அமல்படுத்தி வருகின்றன.
ஆனால், கபசுரக் குடிநீரினை வீட்டுக்கு, வீடு கொண்டு சென்று வினியோகம் செய்து மலைகோட்டை மாநகரில் அமமுக கொடுத்து அசத்தினர். தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் மாநகரம், பகுதி, வட்டம், கிளை கழகம் என அனைவரையும் ஒருங்கிணைந்து குழுவாக செயல்பட்டது ஆளும் கட்சியினரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.