தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட கிராமங்களை ஆராய்ந்து, மக்களின் கருத்துக்களை கேட்க தமிழகம் வந்த அமெரிக்காவை சேர்ந்த பத்திரிக்கையாளர் போலீஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டூரிஸ்ட் விசாவில் கடந்த 27 ஆம் தேதி இந்தியா வந்த மார்க் ஸ்கைலா, ஒரு பத்திரிக்கையாளர் மற்றும் சுற்றுசூழல் ஆர்வலர் ஆவார். கடந்த சில தினங்களாக தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மக்களை சந்தித்ததாக தகவல் கிடைத்த நிலையில் காவல் துறை அவரை பிடித்து சில மணி நேரங்கள் தொடர்ந்து விசாரணை நடத்தியுள்ளது.
இது குறித்து தூத்துக்குடி எஸ்.பி முரளி ஒரு ஆங்கில தொலைக்காட்சியிடம், 'அந்த பத்திரிக்கையாளர் யாரையெல்லாம் சந்தித்தார், அவருடைய விசா வகை ஆகியவை மட்டுமே நாங்கள் விசாரித்தோம். மேலும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்' என கூறியுள்ளார். இது பற்றி அதே தொலைக்காட்சிக்கு பதிலளித்த தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி, 'நாங்கள் அவர் மீது எஃப்.ஐ.ஆர் ஏதும் பதிவு செய்யவில்லை. எதாவது விசா வரையறை மீறல் இருந்தால் சட்ட நடவடிக்கை எடுப்போம். அவர் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக இங்கு வந்திருந்தால், அவர் அதற்கான சரியான விசாவிற்கு விண்ணப்பித்திருக்க வேண்டும்' என கூறியுள்ளார்.