![ambur](http://image.nakkheeran.in/cdn/farfuture/iTu9wQrHmN6j-L9rrCt3o_S45ShBEDGLCUTGKfx5F4w/1599136286/sites/default/files/inline-images/aambur.jpg)
வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு திருப்பத்தூர், இராணிப்பேட்டை என இரண்டு மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களுக்கான மாவட்ட பெருந்திட்ட வளாகம் திருப்பத்தூர் மற்றும் இராணிப்பேட்டை பகுதியில் உருவாகிவருகிறது. இந்நிலையில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்ததூர் மாவட்டத்தின் தலைநகராக ஆம்பூர் நகரத்தை அறிவிக்க வேண்டும் என மனித நேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எம்.எச்.ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள கோரிக்கை அறிக்கையில், இந்தியாவிற்கு மிக அதிக அளவில் அந்நிய செலவானியை ஈட்டி தரும் முதன்மையான நகரமாக ஆம்பூர் விளங்குகின்றது. திருப்பத்தூர் மாவட்டத்திலேயே அதிக தொழிற்சாலைகளைக் கொண்ட நகரமாகவும், வேலூருக்கு அடுத்தபடியாக அதிக வருவாயைத் தரக்கூடிய சார் பதிவாளர் அலுவலகம், மனிதநேய மக்கள் கட்சியின் மறைந்த சட்டமன்ற உறுப்பினர் அ.அஸ்லம் பாஷா அவர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்ட புதிய போக்குவரத்து வட்டார அலுவலகம் மற்றும் பல கல்வி நிலையங்கள் ஆம்பூரில் உள்ளன. மேலும் ஆம்பூரில் 6 வழி தேசிய நெடுஞ்சாலையும் கடக்கிறது, இதே போல் நாட்டின் பல பகுதிகளுக்கும் ரயில்கள் நின்று செல்லும் பெரிய ரயில் நிலையமும் ஆம்பூரில் அமைந்துள்ளது. மக்கள் தொகையிலும், பரப்பளவிலும் ஆம்பூர் நகரமே முன்னிலையில் உள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தின் தலைநகரமாக இருப்பதற்கு ஆம்பூருக்கே அதிக தகுதி உள்ளது. எனவே, திருப்பத்தூர் மாவட்டத்தின் தலைநகராக ஆம்பூர் நகரத்தை அறிவிக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன் எனக்கூறியுள்ளார்.
மாவட்டம் உருவாக்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெறவுள்ள நிலையில் தற்போது மாவட்ட தலைநகராக ஆம்பூரை அறிவிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி கோரியிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.