
தமிழகம் முழுவதும் இந்த வாரம் பொங்கல் திருவிழா கொண்டாடப்படவுள்ளது. இதற்காக மக்கள் தயாராகி வருகிறார்கள். பொங்கல் திருவிழாவில் எருது விடுதல் என்பது முக்கியமானது. மாடுகளைத் துன்புறுத்துகிறார்கள் என பீட்டா என்கிற பிராணிகள் வதை தடுப்பு அமைப்பு, நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் என்று மனுதாக்கல் செய்தது. அதேவேளையில் தமிழக அரசு, சிறப்பு அரசாணை வெளியிட்டு எருதுவிடுதல் விழாவினை நிகழ்த்த ஒப்புதல் வழங்கியது. இதற்கு பல கட்டுப்பாடுகளையும் அரசு சார்பில் விதிக்கப்படுகின்றன. இதனால் தமிழகம் முழுவதும் எருது விடுதல் குழுக்கள் தொடங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் எருதுவிடும் திருவிழா குறித்து ஆலோசனை கூட்டம், தமிழக ஜல்லிக்கட்டு பேரவை துணைத்தலைவர் ஆர்.ஆர்.வாசு தலைமையில் ஜனவரி 10ஆம் தேதி நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 1000-த்திற்கும் மேற்பட்ட காளை உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த காளை உரிமையாளர் அன்பழகன், “தென் மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழா, காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் மாலை நேரத்தில் நடத்த மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது, அதேபோல் அனைத்து கிராமங்களிலும் நடத்தவும் அனுமதிக்கப்படுவதில்லை. தென்மாவட்டங்களைப்போல் திருப்பத்தூர் மாவட்டத்தில் இந்தாண்டு முதல் எருது விடும் திருவிழாவிற்கு காலை 8 மணி முதல் 5 மணி வரை நடைபெற மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்க வேண்டும். திருப்பத்தூர் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் எருது விடும் திருவிழாவிற்கு அனுமதி வழங்க அனுமதிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாககத்திடம் கேட்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
காளை உரிமையாளர்களின் சார்பில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து இதுதொடர்பாக கோரிக்கை மனு தரவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.