சிதம்பரம் வடுகநாதன் திரையரங்கில் கடந்த 17-ந்தேதி இரவு சிரஞ்சீவி (29) சகோதரர்கள் பழனிச்சாமி, ராமராஜன், அவரது தாயார், அண்ணி, தங்கை மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினருடன் படம் பார்க்க சென்றுள்ளனர். அப்போது திரையரங்கு ஊழியர்கள் சிரஞ்சீவியிடம் குடும்பத்தினர் முன்னிலையில் மது அருந்தி வந்தியா? என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் வாக்குவாதம் முற்றி திரையரங்கு ஊழியர்கள் சிரஞ்சீவி மற்றும் அவரது அண்ணன் பழனிச்சாமி, ராமராஜன் ஆகியோரை கட்டை மற்றும் அங்கிருந்த பேரிகேட் பைப்புகளால் அடித்ததில் சிரஞ்சீவியின் மண்டை உடைக்கப்பட்டு 9 தையல்கள் போடப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல ராமராஜனின் 18 ஆயிரம் விலை உள்ள செல்போன் நொறுங்கி உள்ளது. சிரஞ்சீவியின் ஸ்மார்ட் வாட்சும், பாக்கெட்டில் இருந்த 1500 ரூபாயும் தொலைந்துள்ளது. இந்த சம்பவம் நடைபெற்றபோது, திரையரங்கின் மேலாளர் அருகில் நின்று வேடிக்கை பார்த்துள்ளார். இந்த சம்பவம் சிதம்பரம் பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் காவல்துறையினர் சம்பந்தப்பட்டவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து காவல்நிலைய ஜாமீனில் விட்டுவிட்டனர்.
காவல்துறையின் இந்த செயலை கண்டித்து சிதம்பரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி நகரச் செயலாளர் ராஜா, தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி பேசினார்.
இதில் சிதம்பரம் நகர் மன்ற துணைத் தலைவர் முத்துக்குமார், மாவட்டக்குழு உறுபினர் வாஞ்சிநாதன், சித்ரா, நகர்குழு சங்கமேஸ்வரன், சின்னையன்., இந்திய கம்யூ கட்சி தமிமுன் அன்சாரி, காங்கிரஸ் கட்சி நகர தலைவர் தில்லை ஆர்.மக்கீன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி எம்.என்.ராதா, மாவட்ட துணைத் தலைவர் ராஜாசம்பத்குமார், செயல் தலைவர் தில்லை கோ.குமார் திராவிடர் கழகம் ஆர்.செல்வரத்தினம், தமிழக வாழ்வுரிமை கட்சி ஆர்.கே.குமரன், மனித நேய மக்கள் கட்சி ஷாகுல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் ஆதிமூலம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி, மதிமுக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்று திரையரங்கு ஊழியர்களின் தொடர்ச்சியான தாக்குதல் மற்றும் இதற்கு காவல்துறையினர் சரியான நடவடிக்கை எடுக்காததை கண்டித்து பேசினர்.
பின்னர் திரையரங்கிற்கு வந்தவர்களை கொடூரமாக தாக்கிய ஊழியர்கள் மீது மட்டுமல்லாமல், நடந்த தாக்குதலை ஊக்குவிக்கும் விதமாக செயல்பட்ட தியேட்டர் மேலாளர் வடுகநாதன் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். கைது செய்வது போல நாடகமாடி, குற்றவாளிகளை காவல் நிலையத்தில் நிற்க வைத்து புகைப்படம் எடுத்து, இரவே ரிமாண்டுக்கு அனுப்புவதாக சொல்லி குற்றவாளிகளை வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ள சிதம்பரம் நகர காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும். வாலிபர் சிரஞ்சீவியை தலையில் கொடூரமாக தாக்கியதற்கான அரசியல் அமைப்புச்சட்டம் 326 மற்றும் அவர்களது பொருட்களை பிடுங்கியதற்காக 395 ஆகிய பிரிவுகளைச் சேர்த்திட வேண்டும். தாக்குதலுக்குள்ளாகி சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிரஞ்சீவிக்கும் அவரது சகோதரர்களுக்கும் இழந்த பொருளை மீட்டு தருவது மட்டுமல்ல, அவர்களுக்கு உரிய இழப்பீட்டையும் கொடுத்திட ஆவண செய்ய வேண்டும்.
திரையரங்கில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். சம்பவம் குறித்து மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்து நடவடிக்கை மேற்கொள்வது. மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த சம்பவத்தில் காவல்துறையின் தவறான நடவடிக்கையை கண்டித்து 24 ந்தேதி சிதம்பரம் நகர காவல் நிலையத்தின் முன்னால் அனைத்து கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.