நெடுவாசல் ஹைட்ரோ கார்ப்பன் திட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்து கட்சி தலைவர்களை அழைத்து போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி 15 ந் தேதி மத்திய அரசால் ஹைட்ரோ கார்ப்பன் எடுக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டதால் அடுத்த நாள் நெடுவாசல் கிராமத்தில் தொடங்கிய போராட்டம் அடுத்தடுத்து நல்லாண்டார்கொல்லை, வடகாடு, கோட்டைக்காடு ஆகிய கிராமங்களிலும் பரவியது. தொடர்ந்து நெடுவாசல் கிராம மக்களுக்கு ஆதரவாக நேரில் ஆதரவு தெரிவித்த சுற்றவட்டார கிராம விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்கள் அந்தந்த கிராமத்திலும் போராட்டங்களை நடத்தினார்கள். அப்படித் தான் கீரமங்கலத்தில் இதற்காக 5 முறைக்கு மேல் போராட்டம் நடந்தது. அதில் மார்ச் 6 ந் தேதி தொடர் போராட்டம் நடத்த பந்தல் அமைக்கப்பட்டதால் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது ஆலங்குடி நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் வந்துள்ளதால் பரபரப்பு எற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 3 ந் தேதி புளிச்சங்காடு கைகாட்டிக்க சுற்றப்பணயம் வந்த ம.தி.மு.க பொதுச் செயலாளர் வை.கோ விரைவில் நெடுவாசல் போராட்டம் தொடங்க உள்ளது என்று கூறினார்.
தற்போது ஹைட்ரோ கார்ப்பனுக்கு எதிராக போராடியவர்கள் மீது ஒரு வருடத்திற்கு முன்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் வந்துள்ள தகவலை வை.கோ, சீமான், ராமதாஸ், மற்றும் பல அரசியல் கட்சி தலைவர்களுக்கும் விவசாய அமைப்புகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கீரமங்கலத்தில் போராட்டக்குழுவின் அவசர ஆலோசனைக் கூட்டம் துரைப்பாண்டியன் தலைமையில், தங்க.கண்ணன் முன்னிலையில் நடந்தது. அந்த கூட்டத்தில்.. நெடுவாசல் திட்டதிற்காக போராடிய விவசாயிகள், இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யமாட்டோம் என்று பேச்சுவார்த்தைக்கு வந்த மாவட்ட அதிகாரிகள், காவல் துறையினர் கூறினார்கள். ஆனால் அவர்கள் சொன்னதற்கு மாறாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போராட்டம் நடத்தும் விவசாயிகளை அச்சுறுத்துவதாக உள்ளது.
அதனால் இந்த வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்த வேண்டும். முதல்கட்டமாக நெடுவாசல் போராட்டக்குழுவின் உயர்மட்டக்குழு, மற்றும் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து கூறவது.. அந்த தலைவர்கள் சொல்லும் தேதியில் விரைவில் மிகப் பெரிய போராட்டம் நடத்துவது என்றும் அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 15 ந் தேதி நீதிமன்றம் செல்லும் போது வழக்கில் உள்ளவர்களுடன் ஊர்வலமாக செல்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் விரைவில் மீண்டும் பெரிய போராட்டம் நடக்கலாம் என்று கூறப்படுகிறது.