Skip to main content

இரட்டை கொலைக்கு காரணமான ஆக்கிரமிப்பு குளத்தில் குவிந்த சமூக ஆர்வலர்கள்! 

Published on 04/08/2019 | Edited on 04/08/2019

கரூர் மாவட்டம் குளித்தலை முதலைபட்டியில் உள்ள குளம் ஆக்கிரமிப்பை அகற்ற வழக்கு தொடுத்த தந்தை - மகன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக பத்திரிகைகளில் வெளி வந்த செய்திகளின் அடிப்படையில் மதுரை ஐகோர்ட்டு பதிவாளர் தாமாக முன்வந்து வழக்கு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், முதலைப்பட்டியில் உள்ள நீர் நிலைகளை ஆக்கிரமித்தது தொடர்பான வழக்கில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதால் வீரமலையும், அவருடைய மகன் நல்லதம்பியும் கொல்லப்பட்டுள்ளனர்.

 

all over tamilnadu social workers visit karur kuliththalai kulam and elumalai family

 

 

எனவே அவர்களின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்கவும், குடும்பத்தினருக்கு அரசு வேலை மற்றும் உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிடவேண்டும் என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்திய நாராயணன், புகழேந்தி ஆகியோர் கூறுகையில், நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்தனர். அதேபோல முதலைப்பட்டியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி வழக்கை  வருகிற 14-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.

 

இந்த நிலையில் அப்பாவையும் மகனையும் பறி கொடுத்த வீரமலை குடும்பத்தினர் தவித்து வருகிறார்கள். இவர்கள் குடும்பத்திற்கு காவல்துறை பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இருந்து சமூக ஆர்வலர்கள் இன்று திரண்டு வீரமலை குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லியும் குளத்தின் ஆக்கிரமிப்பு பகுதிகளை பார்வையிட்டார். வீரமலை குடும்பத்தினருக்கு நிதி உதவியும் கொடுத்தனர். 

 

 

all over tamilnadu social workers visit karur kuliththalai kulam and elumalai family

 

 

இது குறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர்கள், சமூகநீதி பேரவை ரவிக்குமார், அய்யாரப்பன் ஆகியோர் குளித்தலை முதலைப்பட்டி குளம் மொத்தம் 197 ஏக்கர் 43 சென்ட் பரப்பளவு கொண்டது. அதில் 37 ஏக்கர் பரப்பளவை 50-க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தனர். இதற்காக முறைகேடாக பட்டாவும் பெற்று நெல், வாழை ஆகியவற்றை பயிரிட்டுள்ளனர்.

 

இதன் காரணமாக மழை நீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டதால் குடிநீர் ஆதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. குளத்தின் கரையில் அங்காளம்மன் கோவிலும் உள்ளது. அந்த கோவில் ஆக்கிரமிப்பு பகுதியில் அமைக்கப்பட்டதால் பிரச்சனை எழுந்துள்ளது. நீதிமன்ற உத்தரவு காரணமாக முதலைப்பட்டி ஏரியின் அசல் பரப்பளவு எவ்வளவு, அதன் பரப்பளவு குறைந்ததற்கான காரணம் என்ன? அங்கு பொது ஆக்கிரமிப்பு எவ்வளவு உள்ளது. தற்போதைய ஆக்கிரமிப்பாளர் எத்தனை பேர் என்று அதிகாரிகள் ஆய்வு செய்து விசாரணை நடத்த தொடங்கினர்.

 

 

all over tamilnadu social workers visit karur kuliththalai kulam and elumalai family


 

ஆக்கிரமிப்பு பகுதியில் கோவில் வருவதால் கோவிலை அதிகாரிகள் இடித்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக  ஆக்கிரமிப்பு வீடுகள், விவசாயம் செய்த இடங்கள் எல்லாம் பறிபோகும் என்பதால் வீரமலை, நல்லதம்பியை  கூலிப்படை வைத்து கொலை செய்திருப்பது தமிழக முழுவதும் உள்ள சமூக ஆர்வலர்களிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்கால சமூக நலனுக்காக போராடி இரண்டு உயிர்களை பறிகொடுத்த குடும்பத்திருக்கு ஆறுதல் சொல்ல தமிழக முழுவதும் இருந்து சமூக ஆர்வலர்கள்  முல்லைவேந்தன், சின்னதுரை, வின்சென்ட், பிரபாகரன், கிருஷ்ணமூர்த்தி,  சோமசுந்தரம், கிருஷ்ணானந்தம், தெய்வக்குமார், அய்யராப்பன், ஆருண், பிரபு, மணிக்குமார், தேவேந்திரன், ரவிக்குமார், கிள்ளிவளவன் உள்ளிட்ட பலர் இன்று வீரமலை குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லி அவர்களுக்கு 6,000 நிதி உதவி கொடுத்தோம்.

 

all over tamilnadu social workers visit karur kuliththalai kulam and elumalai family

 

சமூக ஆர்வலர்கள் மீது நடத்தப்படும் இந்த கொலை வெறி தாக்குதல் நடத்துபவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழகம் முழுவதும் உள்ள ஏரி, குளம் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று இந்த பிரச்சனைகளை இத்தோடு விடாமல் தொடர் போராட்டமாக தொடங்க உள்ளோம் என்றார்கள்.




 

சார்ந்த செய்திகள்