



மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி 13வது நாளாக, இன்றும் (08.12.2020) விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், டிசம்பர் 8ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெறும் என விவசாயிகள் அறிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று, விவசாயப் போராட்டங்களுக்கு ஆதரவாக நாடுமுழுவதும் பல்வேறு இடங்களில், கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும், அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் நாடுமுழுவதும் மறியல் போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டுவருகின்றனர்.
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புகள் சார்பில் சாஸ்திரி பவன் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தமிழக ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் “விவசாயச் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் விடுத்த அரைகூவலுக்கு ஆதரவாக, ’பாரத் பந்த்’ எனற போராட்டம் இன்று வெற்றிகரமாக நடைபெற்றுவருகிறது. இந்த, விவசாயச் சட்டங்களுக்கு நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க அரசு ஆதரவு தெரிவிக்காமல் இருந்திருந்தால், இந்தச் சட்டங்களே வந்திருக்காது. எனவே, அ.தி.மு.க அரசு இதற்காக மன்னிப்பு கேட்கவேண்டும், மேலும், இந்த விவசாயச் சட்டங்களுக்கும் தமிழக அரசிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை எனப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்பதை அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.