விழுப்புரம் மாவட்டம் சாலாமேடு பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. மது அருந்திவிட்டு சாலையிலேயே சுற்றித் திரிவது, அரைகுறை ஆடைகளுடன் சாலையில் படுத்து கிடப்பது போன்றவற்றால் பொதுமக்களுக்கு குறிப்பாக பெண்கள், மாணவிகளுக்கு தொந்தரவு உள்ளதாக கூறி அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்கள் பலமுறை போராட்டம் நடத்தினர். மேலும் அரசு உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தனர். இந்தப் பெண்களின் கடும் போராட்டத்திற்கு பிறகு அந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது.
இதையடுத்து மதுப்பிரியர்கள் ஐந்து கிலோ மீட்டர் தூரம் சென்று டாஸ்மாக் கடையில் மது அருந்தி வந்தனர். மது அருந்தியவர்கள் சிலர் போதையில் டாஸ்மாக் பாரிலேயே படுத்துவிடுகின்றனர். வீட்டுக்கு செல்வதில்லை.
இந்நிலையில், தங்கள் கணவன்மார்கள் மது வாங்குவதற்காக வெகுதூரம் செல்ல வேண்டியிருக்கிறது. அவர்களால் அந்த பழக்கத்தை விடவும் முடியவில்லை. இதனால் கடையை திறக்க வேண்டும் என்று மதுப்பிரியர்களின் மனைவிகள் பூட்டியிருந்த டாஸ்மாக் கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்து அங்கு வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.
இதனிடையே டாஸ்மாக் கடை மூடுவதற்கு காரணமாக இருந்த பெண்கள் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மதுப்பிரியர்களின் மனைவிகள், உள்ளூரில் கடை இருந்தபோது குவாட்டர் குடித்தவர்கள், வெளியூருக்கு கடை சென்றவுடன் அதையும் தாண்டி குடிக்கிறார்கள். கேட்டால் ஐந்து கிலோ மீட்டர் செல்வதை காரணமாக சொல்கிறார்கள் என போலீசாரிடம் தெரிவித்தனர்.
மீண்டும் டாஸ்மாக் கடை திறந்தால் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்வோம் என கடையை மூட காரணமாக இருந்த பெண்கள் எச்சரிக்கை விடுத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இருதரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர் போலீசார்.