Skip to main content

மறைந்திருந்த டிஎஸ்பி; கையும் களவுமாக சிக்கிய அதிமுக பிரமுகர்!

Published on 19/05/2023 | Edited on 19/05/2023

 

AIADMK panchayat president caught while accepting bribe

 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு அருகே உள்ளது கீழக்கோட்டை ஊராட்சி. இந்த பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவருடைய தந்தையான மணிமுத்து என்பவருக்கு கல்லல் கிராமத்தில் சொந்தமாக வீடு, நிலங்கள் ஆகியவை இருக்கின்றன. அத்தகைய சொத்துக்களை பாலாஜி தன்னுடைய பெயருக்கு பத்திரப்பதிவு அலுவலகத்தில் பெயர் மாற்றம் செய்துள்ளார்.

 

அதுமட்டுமின்றி, அந்த சொத்துக்களை பாலாஜி தன்னுடைய பெயருக்கு மாற்றிய பிறகு, அதற்கான வீட்டு வரி ரசீது வழங்க வேண்டும் என கல்லல் ஊராட்சி மன்றத்தை அணுகியுள்ளார். அந்த ஊராட்சி மன்றத்தின் தலைவராக இருப்பவர் நாச்சியப்பன். இவர், அதிமுக கட்சியில் கல்லல் நகரச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். அந்த ஊரில் நாச்சியப்பன் மிகவும் பிரபலமானவர். இந்நிலையில், பாலாஜியின் மனுவை ஆராய்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் நாச்சியப்பன், "வீட்டு வரி ரசீதை மாற்றிக் கொடுக்க வேண்டும் என்றால் 13 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பாலாஜி, "எதுக்கு சார் லஞ்சம் கொடுக்கணும். இது எங்கப்பாவோட வீடு. அதுக்கு நா எதுக்கு லஞ்சம் கொடுக்கணும்" என வாக்குவாதம் செய்துள்ளார். அதற்கு பதிலளித்த நாச்சியப்பன், "ஓ நீ அவ்வளவு பெரிய ஆளா? சரி நீ உன்னால முடிஞ்சத பாத்துக்கோ" என அதட்டலுடன் கூறியுள்ளார்.

 

மேலும், ஊராட்சி மன்றத் தலைவரின் இந்த பேச்சால் அதிர்ந்து போன பாலாஜி, என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்துப் போயுள்ளார். அதன்பிறகு, ஒரு கட்டத்தில் தைரியத்தை வரவழைத்துக் கொண்ட பாலாஜி, சிவகங்கை மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையிடம் புகார் அளித்தார். இதையடுத்து, அதிகாரிகள் கூறிய ஆலோசனைப்படி ரசாயன பவுடர் தடவிய 13 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு ஊராட்சி அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அப்போது, பாலாஜி தான் வைத்திருந்த பணத்தை நாச்சியப்பனிடம் கொடுக்கும்பொழுது, அவர் தன்னுடைய கார் டிரைவரான சங்கரிடம் கொடுத்துவிடும்படி கூறியுள்ளார். அதன்பிறகு, பாலாஜி அந்த பணத்தை சங்கரிடம் கொடுக்கும்பொழுது, அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி ஜான் பிரிட்டோ தலைமையிலான மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், ஊராட்சி மன்றத் தலைவரான நாச்சியப்பன் மற்றும் கார் ஓட்டுநரான சங்கர் ஆகிய இருவரையும் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர்.

 

இதையடுத்து. அவர்களை கைது செய்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, சாதாரண வீட்டு வரி ரசீதுக்காக அதிமுக பிரமுகர் ஒருவர் லஞ்சம் வாங்கிய சம்பவம் காரைக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்