அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரெத்தினசபாபதி அ.தி.மு.க.வில் நின்று வெற்றி பெற்றாலும் ஜெ. மறைவுக்கு பிறகு சசிகலா - தினகரன் பக்கம் போனவர். எடப்பாடியிடம் சமாதானம் பேசவும் போனார். எடப்பாடி சமாதானம் ஆகாதநிலையில் தினகரனுடன் நாடாளுமன்றத் தேர்தல் வரை பயணித்தார். அதன் பிறகு சபாநாயகர் நடவடிக்கை என்றதும், பழையப்படியே அமைச்சர் விஜயபாஸ்கருடன் சென்று எடப்பாடியை சந்தித்து வழி தவறிப்போனேன், தம்பி விஜயபாஸ்கர் வழிகாட்டி அழைத்து வந்தார் என்று பேசி மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்து ச.ம.உ. பதவியை தக்கவைத்துக் கொண்டார்.
ஆனாலும் அமைச்சரால் அறந்தாங்கி தொகுதி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டே வந்தது. ச.ம.உ. ரெத்தினசபாபதியின் சொந்த கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட 110 விதியில் ஜெ. அறிவித்தாலும் அந்த பணியை கூட செய்யவில்லை.
இந்த நிலையில் தான் அ.ம.மு.க. மா.செ.வாக இருந்த எம்.எல்.ஏ.வின் தம்பி மணமேல்குடி பரணி கார்த்திகேயன் தி.மு.க.வில் இணைந்தார். தேர்தல் பணிகளில் பரணியின் செயல் எப்படி இருக்கும் என்று தெரியும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழ்ந்தார். அதன் பிறகு நடந்த உள்ளாட்சி தேர்தலில் மணமேல்குடி ஒன்றியத்தில் அத்தனை கவுன்சில்களையும் திமுக வென்று பரணி கார்த்திகேயன் சேர்மன் ஆனார். தேர்தல் பணிகளில் தி.மு.க. வேட்பாளருக்காக அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ரெத்தினசபாபதியின் மகன் வாக்கு சேகரிப்பில் களமிறங்கி கலக்கினார்.
இந்த நிலையில்தான் சில நாட்களுக்கு முன்பு தனது ஆதரவாளர்களுடன் ரெத்தினசபாபதி எம்.எல்.ஏ. பேசிக்கொண்டிருக்கும்போது, ''தம்பி கார்த்திகேயன் தி.மு.க.வுக்கு போனதும் ரொம்ப சங்கடப்பட்டேன். கவலையாக இருந்தது. ஒரே கூட்டில் இருந்தோம் என்று வருத்தம் இருந்தது. ஆனால் இப்ப அதுவும் நல்லதாக தெரிகிறது. அ.தி.மு.க. - தி.மு.க. எது ஆளுங்கட்சியாக இருந்தாலும் இங்கே (மணமேல்குடியில் ) நெற்குப்பம் தான் ஆளனும். ஆளும்.
சீனியாரு (தி.மு.க. துணை சேர்மன்) மாட்டுவணடிக்குள்ள மாடு விழுந்த மாதிரி வந்து விழுந்துட்டார். துரைமாணிக்கம் தாங்கிடுவாரா? விஜயபாஸ்கர் தாங்கிடுவாரா? நாளைக்கு பீசப் புடுங்கிப்புட்டா தோற்றவுடன் நாய் மாதிரி கிடப்பாய்ங்க...'' என்று எம்.எல்.ஏ.வின் பேச்சு நீண்டுகொண்டே போகிறது.
இதை அவருடன் இருந்த யாரோ ஆடியோவாக பதிவு செய்து வைரலாக பரப்பி வருகிறார்கள். இதே போல கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே எம்.எல்.ஏ. ரெத்தினசபாபதியை சிலர் தரக்குறைவாக பேசும் ஆடியோக்கள் வெளிவந்து வைரலானது. அப்ப அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத கட்சி, இப்ப எம்.எல்.ஏ. பேச்சுக்கா நடவடிக்கை எடுக்கப் போறாங்க என்கிறார்கள்.
இதுகுறித்து எம்.எல்.ஏ.வின் உதவியாளர் ராஜா நம்மிடம் கூறும்போது, ''இது எம்.எல்.ஏ. பேசிய ஆடியோவா என்பது சந்தேகமாக உள்ளது. பல நாள் பேசியதை தொகுத்து யாரோ விஷமிகள் பரப்பி உள்ளனர். இந்த ஆடியோவை பரப்பியவர்கள் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுக்கவும் தயாராக உள்ளோம்'' என்றார்.