நீலகிரி மாவட்டம் தூதூர்மட்டம் என்ற பகுதியில் உள்ள தேயிலைத்தோட்டத்தில் திடீரென பயங்கர சத்தம் கேட்டு தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்துவரும் மக்கள் எழுந்து ஓடிச் சென்று பார்த்தனர். அப்பொழுது சினிமா காட்சிகளில் வருவதுபோல் கார் ஒன்று சுமார் 200 அடி தூரம் மேலே பறந்து தேயிலைத் தோட்டத்தின் பகுதியில் பலமுறை உருண்டு கீழே விழுந்தது. இந்த காட்சியைக் கண்டு அங்கிருந்த மக்கள் அதிர்ந்தனர். சினிமாவில் வரும் காட்சிபோல் நிகழ்ந்த அந்த சம்பவத்தைப் பார்த்து பதறியடித்துக்கொண்டு மக்கள் அங்கு சென்று பார்க்கையில், உண்மையிலேயே அது சினிமா ஷூட்டிங்தான் என்ற தகவலறிந்து அவர்கள் ஆசுவாசமாகினர்.
கரோனா கட்டுப்பாடுகள் திரும்பப்பெறப்பட்டுவரும் நிலையில், குளிர் நிறைந்த நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் சினிமா ஷூட்டிங் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அந்தவகையில், நாகார்ஜுனா நடித்துவரும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு கடந்த 10 நாட்களாக நீலகிரியில் நடந்துவந்துள்ளது. அப்படத்திற்காக எடுக்கப்பட்ட ஷூட்டிங்கில் தான் தூதூர்மட்டம் தேயிலைத்தோட்டத்தில் கார் பறந்த இந்த காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இதன் வீடியோ காட்சிகள் இணையத்திலும் வைரலாகி வருகிறது.