திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டிவீரன்பட்டியில் அ.தி.மு.க சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி கலந்து கொண்டார். அதுபோல் நகரச் செயலாளர் ராஜசேகர் சார்பில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
![AIADMK MLA about MGR Story](http://image.nakkheeran.in/cdn/farfuture/HeRzhXfel0x0iGWvR_35h1eP51C0q8zuyiooTaRTzFM/1579944463/sites/default/files/inline-images/1111111_41.jpg)
இந்த கூட்டத்தில் நிலக்கோட்டை எம்.எல்.ஏ தேன்மொழி பேசும் போது, " சத்துணவு தந்த சரித்திர நாயகனை பேசும்போதெல்லாம் சர்க்கரை பொங்கலாய் இனிக்கிறது. இப்படி மனிதன் இனி பிறப்பார் என்ற ஏக்கம் அனைவரின் மத்தியிலும் இருக்கிறது. 1950 ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ரிக்ஷாக்காரன் படம் நடித்துக் கொண்டிருந்த போது சூட்டிங்கிற்காக மழையில் காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியா சில ரிக்ஷாக்காரர்கள் மழையில் நனைந்தபடி ரிக்ஷாவை ஓட்டிக்கொண்டு வந்தார்கள்.
அதைப் பார்த்து புரட்சித் தலைவர் மிக வேதனை அடைந்தார். இப்படி மழையில் நனைஞ்சுக்கிட்டு கஷ்டப்படுறாங்களே அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார். பின்னர் தமிழ்நாட்டில் எத்தனை ரிக்ஷா தொழிலாளிகள் இருக்காங்க அப்படின்னு கணக்கெடுக்க சொன்னார். உடனே அவங்க உதவியாளர்கள் மொத்தம் 500 பேருக்கு மேல் இருக்கிறார்கள் என்று கூறினர். அனைவருக்கும் உடனடியாக மழைக்கோட்டு வாங்கிக் கொடுக்க ஏற்பாடு செய்யச் சொன்னார்.
அந்த காலத்தில் 500 மழைக்கோட்டுகளுக்கு எங்கு செல்வது. அதனால பம்பாய், கல்கத்தா ஆட்களை அனுப்பி அங்கிருந்து வாங்கிட்டு வரச்சொல்லி ரிக்ஷாக்கார்களுக்கு எல்லாம் கொடுத்தார். அப்படிப்பட்ட தலைவரை போல இப்ப அண்ணன் எடப்பாடி இருக்கிறார். அம்மா 16 அடி பாஞ்சா எடப்பாடி அண்ணன் 32 அடி பாயிராறு. வேணும்னா பாருங்க அடுத்த ஆண்டு 2021ல் அண்ணா திமுக ஆட்சி தான் வரும்" என்று கூறினார். இக்கூட்டத்தில் நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.