கண்ணுக்குத் தெரியாத கரோனா வைரஸ் மனித இனத்திற்கும், நவீன அறிவியலுக்கும் சவால் விட்டுக்கொண்டிருக்கிறது. இதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் வல்லரசு நாடான அமெரிக்கா உட்பட பொருளாதார ரீதியில் முன்னேறியுள்ள அனைத்து நாடுகளும் திணறி வருகின்றன. இந்த வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் பெரிய அளவில் உள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸ் காரணமாக 16,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2,301 பேர் இந்த வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் கரோனா வைரஸின் தாக்கம் பெரிய அளவில் உள்ளது. தமிழகத்தில் 1,477 பேருக்கு இதுவரை கரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 4 மருத்துவர்கள் உட்பட 50 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நரம்பியல் நிபுணர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சென்னை தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநராக இருந்த இவரின் உயிரிழப்பு தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.