புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அதிமுக முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும், மாஜி அமைச்சருமான வடகாடு அ.வெங்கடாசலம் கடந்த 2010 ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். அதிமுகவில் ஆளுமையாக இருந்த மாஜி அமைச்சர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டிருந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சில நாட்கள் வரை போக்குவரத்து முடங்கியது.
அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் மாஜி அமைச்சர் அ.வெங்கடாசலம் உடல் அடக்கம் செய்யப்பட்ட அக்டோபர் 7 ந் தேதி குருபூஜை நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் அன்னதானம், ரத்ததானம் போன்ற நிகழ்வுகளும் நடத்தப்படுவதுடன் கட்சி பாகுபாடின்றி அனைத்துக் கட்சியினரும் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி செல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் அதிமுக முன்னாள் அமைச்சர் விராலிமலை விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ உள்பட அதிமுக நிர்வாகிகள் பலரும் தவறாமல் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திச் செல்வார்கள். மேலும் தமிழ்நாடு முழுவதும் இருந்த பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வாகனங்களில் வந்து குருபூசையில் பங்கேற்று செல்வர்.
அதே போல இந்த ஆண்டும் 7 ஆம் தேதி சனிக்கிழமை ஏராளமானவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்துள்ளனர். தேர்தல் வர உள்ளதால் இந்த ஆண்டு அரசியல் கட்சி நிர்வாகிகள் மேலும் கூடுதலாக வர உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், மருத்துவ கட்டமைப்புகள் இல்லை அதனை சரி செய்ய வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ள நிலையில் அதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் 7 ந் தேதி மதியம் மா.செ, மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பைப் பார்த்த புதுக்கோட்டை மாவட்ட ர.ரக்கள், மாஜி அமைச்சர் வெங்கடாசலம் குருபூசை நாளில் கறம்பக்குடி ஆர்ப்பாட்டம் நடத்துவதால் இரு நிகழ்வுகளிலும் கட்சிக்காரர்கள் பங்கேற்பது சிரமமாக இருக்கும். அதனால் ஆர்ப்பாட்டத் தேதியை மாற்றி அறிவிக்க வேண்டும் என்று எடப்பாடிக்கு பலர் கடிதம் எழுதியுள்ளனர். மேலும் அதிமுக வில் வெங்கடாசலம் பலமாக இருந்து மறைந்துள்ளார். அவரது நினைவிடத்தில் முதலமைச்சராக இருந்த போது எடப்பாடியாரும் அஞ்சலி செலுத்தியுள்ளீர்கள். இப்படி ஒரு மதிக்கத்தக்க தலைவரின் குருபூசை நாளில் ஆர்ப்பாட்டம் நடத்தும் தேதியை மாற்றி அமைத்தால் இரு நிகழ்வுகளில் அதிமுக வினர் ஏராளம் கலந்து கொள்வார்கள் என்று அந்த மனுக்களில் குறிப்பிட்டுள்ளனர். ர.ர க்களின் இந்த கோரிக்கை மனுக்களுக்கு அதிமுக தலைமை மதிப்பு கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.