ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க கடந்த 83 நாள்களாக தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று முதல் தடை உத்தரவு விலக்கிக்கொள்ளப்பட்டு உள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர் படிப்பு பகுதிகள் மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் கிருஷ்ணராஜசாகர், ஹேரங்கி, கபினி ஆகிய அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது.
இந்த அணைகளில் இருந்து உபரிநீர் கடந்த ஜூலை மாதம் முதல் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஒகேனக்கல்லுக்கு, ஜூலை 9ம் தேதியன்று வினாடிக்கு 5600 கன அடியாக இருந்த நீர் வரத்து, அடுத்த நாளே 30 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது.
இதனால் ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ளவும் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் அதிரடியாக தடை விதித்தது. நீர்வரத்து குறைந்து, மறு உத்தரவு வரும் வரையிலும் இந்த உத்தரவு நீடிக்கும் என்றும் அப்போது கூறப்பட்டு இருந்தது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி வினாடிக்கு 2.10 லட்சம் கன அடியாக நீர் வரத்து அதிகரித்ததால், அருவி பகுதிகளில் உள்ள தடுப்பு கம்பிகள் உடைந்தன. நீர்வரத்து குறைந்தபிறகு தடுப்பு கம்பிகளை சீரமைக்கும் பணிகள் நடந்து வந்ததால், அருகளில் குளிக்க அப்போதும் தடை நீட்டிக்கப்பட்டு வந்தது.
தடுப்பு கம்பிகள் சீரமைக்கும் பணிகள் கடந்த 23ம் தேதி முடிவடைந்தன. கடந்த 24ம் தேதியன்று ஒகேனக்கல் காவிரி ஆறுக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி நீர் வரத்து இருந்த நிலையில், மறுநாள் 30 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்படாமல் இருந்தது.
இந்நிலையில், கடந்த 28ம் தேதி நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில், நேற்று 13 ஆயிரம் கன அடியாக குறைந்தது.
பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை மற்றும் அக். 2ம் காந்தி ஜெயந்தி விடுமுறை என விடுமுறைக்காலமாக இருப்பதையொட்டி, சுற்றுலா பயணிகளின் கோரிக்கைகளுக்கு இணங்க ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க நேற்றுமுதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 83 நாள்களாக தொடர்ச்சியாக அருவிகளில் குளிக்க தடை உத்தரவு அமலில் இருந்த நிலையில், தற்போது தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.