Skip to main content

அதிமுக உண்ணாவிரதப் போராட்டம் - காவல்துறை அனுமதி மறுப்பு

Published on 18/10/2022 | Edited on 18/10/2022

 

jh

 

இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில்  எதிர்க்கட்சித் துணைத்தலைவராக உதயகுமாரை அங்கீகரிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பினர் முழக்கங்களை எழுப்பினர். மேலும் சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதன் பின் தர்ணாவில் ஈடுபட்ட பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏக்களை சபாநாயகரின் உத்தரவின் பேரில் அவைக் காவலர்கள் வெளியேற்றினர்.

 

பின் பேசிய சபாநாயகர் அப்பாவு, " சட்டமன்ற விதியின் படி எதிர்க்கட்சித் தலைவர் பதவி தான் அங்கீகரிக்கப்பட்டது. மற்ற பதவிகள் எல்லாம் அவர்களது சட்டமன்ற உறுப்பினர்களை திருப்திபடுத்தக் கொடுக்கும் பதவிகள். சபையில் இருக்கைகள் ஒதுக்கப்படுவது குறித்து முடிவெடுப்பது பேரவைத் தலைவரின் முழு விருப்பம்தான். அதில் யாரும் தலையிட முடியாது" என்று கூறினார்.

 

வெளிநடப்பு செய்தபின் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "நியாயமாக நடுநிலையோடு செயல்படவேண்டிய சபாநாயகர் அரசியல் நோக்கோடு செயல்படுவதாக நாங்கள் நினைக்கின்றோம். சட்டமன்றம் என்பது வேறு. கட்சி என்பது வேறு. அரசியல் ரீதியாக அதிமுகவை எதிர்கொள்ள முடியாத திமுக கொல்லைப்புறத்தின் வழியாக சட்டசபை வழியாக பழிவாங்க நினைக்கின்றது" எனக் கூறினார்.

 

இந்நிலையில், எதிர்க்கட்சித் துணைத்தலைவராக ஆர்.பி. உதயகுமாரை அங்கீகரிக்க மறுத்ததை கண்டித்து அதிமுக சார்பில் நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக தெரிவிக்கப்பட்டு அதற்காக அனுமதி கோரி கமிஷனர் அலுவலகத்தில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாளை நடைபெற இருந்த போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 

சார்ந்த செய்திகள்