கடந்த வருடம் ஜூன் 22ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் கூடி இருந்தது. அப்பொழுது அதிமுகவில் இரட்டை தலைமைகள் இருந்தன. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமைகளாக இருந்த நிலையில், முரண்கள் ஏற்பட்டு ஒற்றைத் தலைமை வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
பல்வேறு சர்ச்சைகளுடன் நடைபெற்ற அந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ஆனால் அது செல்லாது என ஓபிஎஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வழக்குகளும் தொடரப்பட்டது. தொடர்ந்து ஓபிஎஸ் உள்ளிட்ட பல நிர்வாகிகள், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். ஒவ்வொரு கட்டமாக வழக்குகள் நகர்ந்து தற்போது வரை வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், சென்னை வானகரம் பகுதியில் இன்று காலை 10:35 மணிக்கு அதிமுக பொதுக்குழுக் கூட்டம் கூடுகிறது.
அக்கட்சியின் அவை தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் அதிமுகவின் அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகியுள்ள நிலையில், அதிமுகவின் கூட்டணி வியூகங்கள் என்ன என்பது தொடர்பாக பல்வேறு கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் இருந்த நிலையில் இது குறித்தும் இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம், தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. ஸ்ரீ வாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் தொடங்க உள்ள நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தற்போது வருகை புரிந்துள்ளார். திட்டமிட்டபடி இன்னும் சற்று நேரத்தில் அதிமுக பொதுக்குழு தொடங்க உள்ளது.