![nagai thirupoondi](http://image.nakkheeran.in/cdn/farfuture/TBXIuMhmuLuCssoHXIxrPfXbiMtPrpECcmd4lwNGlaE/1542624400/sites/default/files/inline-images/nagai%20thirupoondi.jpg)
கஜா புயல் காரணமாக தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. புயல் பாதித்த இடங்களில் ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சரிந்து விழுந்து சாலைகள் துண்டிப்பு காரணமாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
புயல் பாதித்த இடங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு மற்றும் சாலை சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்டத்தின் அதிராமபட்டினம், மதுக்கூர், மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் எஸ்.டி.பி.ஐ. மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக் தலைமையில் எஸ்.டி.பி.ஐ. பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நாகை மாவட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது தலைமையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நெல்லை, திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட எஸ்.டி.பி.ஐ. பேரிடர் மீட்பு குழுவினர் நவீன இயந்திரங்களை கொண்டு சாலைகளில் கிடக்கும் மரங்கள் மற்றும் மின்கம்பங்களை அகற்றி வருகின்றனர்.
ஒருபுறம் மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள், பால், பிஸ்கட், மெழுகுவர்த்தி, பாய், போர்வை உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும், மின்சாரம் துண்டிப்பு காரணமாக மின்சார மோட்டார்களை இயக்க முடியாத நிலையில், ஜெனரேடர்கள் உதவியுடன் தண்ணீர் பிடித்து மக்களுக்கு குடிநீர் விநியோகமும் செய்யப்பட்டது.
இந்நிலையில், நாகை மாவட்டத்தின் புயல் பாதித்த இடங்களை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று பார்வையிட்டு நிவாரணப் பொருட்களை வழங்கினார். திருப்பூண்டியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான முதல்கட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள், பாய், போர்வைகளை வழங்கினார். இந்நிகழ்வில் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது, மாநில செயலாளர் அகமது நவவி, எஸ்.டி.டி.யூ. மாநில தலைவர் முகமது பாரூக் ஆகியோர் கலந்துகொண்டனர்.