பிப்ரவரி 2ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஜல்லிக்கட்டு வழக்குகள் வாபஸ், கூட்டுறவு வங்கி விவசாய கடன்கள் தள்ளுபடி என பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டிருந்தார். கூட்டுறவுவங்கி கடன்களை தள்ளுபடி செய்திருப்பது தேர்தல் நேரத்தில் முதல்வர் எடுத்திருக்கும் சந்தர்ப்பவாத செயல் எனக் கூறியிருந்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், தொடர்ந்து கூட்டுறவு வங்கி விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என தான் கூறிவந்த நிலையில், தான் சொன்னதைத் தான் தமிழக முதல்வர் பழனிசாமி செய்துள்ளார் எனவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் நான் செய்வதைதான் ஸ்டாலின் சொல்லுகிறார் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட பரப்புரையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஈடுபட்டுள்ளார். அதன்படி இன்று சென்னை போரூரில் திறந்தவெளி வாகனத்தில் நின்று பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ''நான் சொல்வதைத்தான் முதல்வர் செய்கிறார் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறி வருகிறார். ஆனால் நான் செய்வதை தான் அவர் சொல்லுகிறார். கடைசிவரை திமுக சொல்லிக் கொண்டே இருக்கப் போகிறது. செய்யும் இடத்தில் அதிமுக இருக்கப்போகிறது. விவசாயிகள் படும் சிரமங்கள் எனக்கு தெரியும் என்பதால் விவசாயக் கடனை தள்ளுபடி செய்கிறேன். தேர்தல் வருவதற்கு முன்பே திட்டங்களை அறிவித்து நிறைவேற்றுவது தான் அதிமுக அரசு'' என்றார்.