"மாணவியின் தற்கொலை விவகாரத்தில் மத மோதலை ஏற்படுத்த பா.ஜ.க. முயற்சி செய்கிறது. மதமோதலை உண்டாக்கும் பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன்.
தஞ்சைக்கு வந்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டது வருத்தம் அளிக்கிறது, அவரது இறப்பை ஈடுசெய்யமுடியாது. ஆனால் மாணவியின் மரணத்தை வைத்து பா.ஜ.க. அரசியல் ஆதாயம் தேடுவதுதான் அதைவிட வேதனை அளிக்கிறது. மதமாற்ற வற்புறுத்தலால் தான் மாணவி தற்கொலை செய்தார் எனக் கூறி அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழகத்தில் பிரச்சனையை கிளப்பிவருகிறார். கிறிஸ்தவ மிஷினரி சார்பில் பல இடங்களில் ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்றுக் கொடுக்கப்படுகிறது. தற்போது பா.ஜ.க. ஏற்படுத்தி வரும் பொய் பிரச்சாரத்தால் தொண்டு செய்பவர்களும்கூட மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
மாணவி தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், அதற்குள் ஒவ்வொரு தகவல்கள் கிடைக்கின்றன. மாணவி தன்னுடைய பிரச்சனை குறித்து பெற்றோரிடம் கூறாமல் யாரோ ஒரு நபரிடம் கூறியது ஏற்புடையதாக இல்லை. சொல்லப் போனால் அந்த நபர் எடுத்த வீடியோ கூட உண்மையா என்று தெரியவில்லை. ஒருவேளை உண்மையாக இருப்பினும் அதில் பேசியது மாணவியின் குரல் தானா என்ற சந்தேகமும் உள்ளது.
இதுகுறித்து நீதிமன்றம் ஆய்வு செய்து வருகிறது. அதற்குள் மற்றொரு வீடியோ வெளிவந்துள்ளது. இன்னும் இதுபோன்று எத்தனை வீடியோக்கள் வரும் என தெரியவில்லை. மாணவி மரணத்தை வைத்து பா.ஜனதா மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் மத மோதலை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்.
ஒரு படித்த ஐ.பி.எஸ். அதிகாரி செய்யும் வேலையா இது. அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தவிர தேசிய பாஜக, விசாரணைக் குழு என்று 4 பேரை நியமித்துள்ளது. இதில் இருந்தே மத மோதலை தேசிய அளவில் பாஜக கொண்டு செல்ல முயற்சி செய்கிறது என்பதை உணரமுடியும். இவர்கள் மாநில அரசை மீறி எப்படி விசாரணை குழு அமைக்கலாம்.
தூய இருதய பள்ளியானது 162 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்துள்ளனர். இதில் அனைத்து மதத்தினரும் படித்துள்ளனர். தற்போதும் படித்து வருகின்றனர். இதுவரை இப்படி ஒரு பிரச்சனை வரவில்லை. தற்போது மதமாற்ற பிரச்சனை வந்துள்ளது புரியாத புதிராக இருக்கிறது. இது தவிர பெற்றோர் தொந்தரவால் மாணவி தற்கொலை செய்துள்ளார் என்றும் செய்திகள் செவி வழியாக வருகிறது. இப்படி ஒவ்வொரு பிரச்சனையும் செவிவழி செய்தியாகத் தான் உள்ளது. எனவே போலீசார் தீவிர விசாரணை நடத்தி உண்மைத் தன்மையை வெளிக்கொண்டுவர வேண்டும்" என்றார்.