கோவை புறநகர் பகுதிகளில் இரண்டு நாட்களுக்குப் பிறகு இன்று (19.06.2021) கரோனா தடுப்பூசி முகாம் துவங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் கரோனா தொற்று எண்ணிக்கை 9 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்தாலும், கோவையில் தொற்று எண்ணிக்கை ஒரு நாளைக்கு ஆயிரம் என்ற எண்ணிக்கையிலேயே தொடர்ந்துவருகிறது. கரோனா பாதிப்பு அதிகம் இருந்த சென்னை போன்ற நகரங்களில் கூட தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையில், கோவையில் கரோனா தொற்று அதிகரித்துள்ளது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிட்டத்தட்ட இரண்டாவது அலையில் மட்டும் நாளொன்றுக்கு அதிகபட்சம் 5 ஆயிரம் என தொற்று எண்ணிக்கை இருந்தது. தற்போது படிப்படியாக குறைந்துவந்தபோதிலும் நேற்று கோவையில் 1,009 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இந்த அச்சம் காரணமாக மக்களிடம் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் ஆர்வம் அதிகரித்துவருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா 500 தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இதனால் கோவையில் அனைத்து இடங்களிலும் மக்கள் தடுப்பூசி மையங்களை நோக்கி வருகிறார்கள்.
கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர். இன்று கோவை மாவட்டத்திற்கு 6,500 தடுப்பூசிகள் வந்துள்ள நிலையில், மாநகரப் பகுதிகளில் தடுப்பூசி போடப்படவில்லை. புறநகர் பகுதியில் மட்டும் தற்போது முகாம் நடைபெற்றுவருகிறது. இதனால் இன்று அதிகாலை முதலே சுகாதார நிலையங்களில் மக்கள் வரிசையில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.