திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு முன்பெல்லாம் பௌர்ணமி நாட்களில் மட்டும்தான் லட்ச கணக்கான பக்தர்கள் வருவார்கள். அண்ணாமலையாரை தரிசனம் செய்துவிட்டு கிரிவலம் சென்றுவிட்டு ஊருக்கு செல்வார்கள். இப்போது நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கிரிவலப்பாதை 24 மணி நேரமும் கிரிவல பக்தர்களால் நிறைந்துள்ளது.
கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநில பக்தர்களைத் தாண்டி இப்போது வடஇந்தியாவின் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசத்தில் இருந்தெல்லாம் பக்தர்கள் வருகிறார்கள். அப்படி வரும் பக்தர்களின் வாகனங்கள் நிறுத்த தேவையான வசதிகள் இல்லாததால் நகரத்தின் முக்கிய சாலைகளில் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு சென்றுவிடுகிறார்கள். இதனால் தினம், தினமும் நகரமே போக்குவரத்து பிரச்சனையால் சிக்கி தவிக்கிறது.
அப்படித்தான் ராஜகோபுரம் அருகே முருகர் தேர் பக்கத்தில் வித்தியாசமாக ஒரு கார் சாலை ஓரமே நிறுத்தி இருந்தது. முதலில் யாரோ நிறுத்திவிட்டு சென்றுயிருப்பார்கள் என நினைத்தனர், அந்த காரால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் அந்த காரை எடுக்கச்சொல்லி வாகன ஓட்டிடம் சொல்வதற்கு காரின் முன்பக்கம் சென்றபோது அதிர்ச்சியடைந்துவிட்டனர்.
அப்போது காரின் முன்பக்க கண்ணாடி டேஸ்போர்டில் வரிசையாக மனித மண்டை ஓடுகள் வைக்கப்பட்டு இருந்தன. காரின் கண்ணாடி, பேனட் ஆகியவற்றில் டேஞ்சர் என ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. கார் டோர், பின்பக்க கண்ணாடியில் நிர்வாண சாமியாரின் படங்கள், ஒட்டப்பட்டு உள்ளே என்ன இருப்பது என்னவென தெரியாமல் மறைத்திருந்தது. கார் யாருடையது எனப் பார்க்க வாகன எண்ணை பார்க்க தேடியபோது வாகன எண் இருக்கும் இடத்தில் அகோரி நாகசாது என்ற பெயர் பலகை தான் இருந்தது. காருக்குள் என்ன இருக்கிறது எனப்பார்க்க இன்னமும் அதிர்ச்சியடைந்தனர். உடனே காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். நகர காவல்நிலையத்தில் இருந்து போலிஸாரும், போக்குவரத்து போலிஸாரும் அங்கே வந்தனர்.
காவல்துறையினர் காரை கண்ணாடி வழியாக சோதித்துவிட்டு, காருக்குள் மண்டை ஓடுகள், முகம் சுளிக்க வைக்கும் புகைப்படங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். காரின் மீது எழுதியிருந்த அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு அழைத்தனர். போலிஸ் அழைத்தும் சவகாசமாக ஒரு மணி நேரம் கழித்து கழுத்து நிறைய ருத்ராட்ச கொட்டையும், நெற்றி நிறைய விபூதி பட்டையுடன் வந்தவர் நான் தான் காரின் உரிமையாளர் என்றார். காசியில் அகோரிகள் இருப்பார்களே அப்படியிருந்தார்.
அவரை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். காரில் இருந்து இறங்கி உள்ளே வா என அழைத்தபோது, எனக்குச் சட்டம் என்று எதுவும் கிடையாது, உங்க சட்டத்தால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. என் பெயர் கடவுள். நானே சிவன், நானே பிரம்மா, நானே விஷ்ணு எனக் கூறி தன் உடலில் இருந்த சில ஆடைகளை அவிழ்த்து போட்டுவிட்டு காவல் நிலையத்திற்குள் செல்ல முயன்றார். இதனால் அதிர்ச்சியும், அருவருப்பும் அடைந்த போலீசார், அவரை காருக்குள்ளேயே வைத்து விசாரணை மேற்கொண்டனர். அந்த கார் சென்னையில் பதிவு செய்துயிருந்தது. உள்ளே நம்பர் பிளேட் இருந்தது. அதன்மீது தான் அகோரி என எழுதிய போர்டு தொங்கவிட்டிருந்ததைக் கண்டறிந்தனர்.
விசாரணையில், அவர் ரிஷிகேஷ் பகுதியில் இருந்து திருவண்ணாமலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்ததாகவும், கார் பார்க்கிங் செய்ய இடம் ஏதும் இல்லாததால் சாலையிலேயே நிறுத்திவிட்டு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ததாகவும் கூறினார். திருவண்ணாமலைக்கு வந்து பொதுமக்களை அச்சுறுத்துவம் வகையில் செயல்பட்டவர் மீது வழக்கு பதிவு செய்து சிறைக்கு அனுப்பாமல் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக ரூபாய் 3000 அபராதம் பெற்றுக் கொண்டு அவரை அனுப்பி வைத்ததாக குற்றம்சாட்டுகின்றனர் அப்பகுதி மக்கள். இந்தச் சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.