புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல் சரகம் அணவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் மகன் பாஸ்கர் (வயது 41). இவர் கடந்த பல வருடங்களாக புளிச்சங்காடு கைகாட்டி கடைவீதியில் பேராவூரணி சாலையில் உள்ள ஒரு கட்டடத்தின் மாடியில் ஆண்களுக்கான ஆயத்த ஆடைகள் கடை நடத்தி வருகிறார். இதனையொட்டி தீபாவளி விற்பனைக்காகப் பல பகுதிகளில் இருந்தும் பல லட்ச ரூபாய் மதிப்பில் உடைகள் கொள்முதல் செய்து வைத்திருந்தார். கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி இரவு அப்பகுதியில் மழை பெய்த நேரத்தில் மின்சாரம் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் கடையை மூடிவிட்டுச் சென்றுவிட்டனர். மறுநாள் காலை பூட்டப்பட்ட கடைக்குள்ளிருந்து புகை வருவதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் கீரமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கும் கடை உரிமையாளர் பாஸ்கருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
அப்போது கடையைத் திறந்து பார்த்த பாஸ்கர் அதிர்ச்சியடைந்து அப்படியே அமர்ந்துவிட்டார். பல லட்ச ரூபாய் மதிப்பிலான அத்தனை ஆயத்த உடைகளும் கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட உடைமைகளும் எரிந்து நாசமாகி இருந்தது. மேலும் உள்ள பொருட்களும் எரிந்து கிடந்தது. துணிகளில் தீ எரிந்ததால் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். மின் கசிவு காரணமாக தீ பற்றியதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என வடகாடு போலீசார் விசாரணை செய்து வந்தனர். ஆனால் கடை உரிமையாளர் தரப்பில் மின் கசிவில் தீ பற்றவில்லை வேறு யாரோ தீ வைத்துள்ளனர் என்று உறுதியாகக் கூறினார்.
அதோடு விடாமல் தனது கடையில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் எரிந்த நிலையில் இருந்ததால் அந்த கடைவீதியில் உள்ள கேமராக்களை ஆய்வு செய்த போது ஒரு இளைஞர் அந்தப் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் இருந்து பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோல் வாங்கி வரும் காட்சியை காண முடிந்தது. அதன் பிறகும் தொடர்ந்து முயற்சி செய்து தனது கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் உள்ள கார்டிஸ்கை சென்னைக்கு அனுப்பிப் பல நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு ஓபன் செய்து போது அதிர்ச்சியடைந்துள்ளனர். அதில் கடை உரிமையாளர் சந்தேகப்பட்டது போல பெட்ரோல் வாங்கி வரும் இளைஞன் அதற்கு முன்பு கடைக்குள் நுழைந்து கல்லாவில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே சென்று சில மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் வந்து பெட்ரோலை ஊற்றி தீ வைக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இதனையடுத்து தன் கடைக்கு தீ வைத்து தீபாவளி விற்பனைக்காகக் கொள்முதல் செய்யப்பட்ட பல லட்ச ரூபாய் மதிப்பிலான துணிகள் எரித்து நாசமாக்கிய அந்த இளைஞன் யார் என்பதை அடையாளம் கண்டனர். அதாவது அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் மகன் ராஜ்குமார் (வயது 25) என்பவன் தான் தீ வைத்தது என்பதை அடையாளம் கண்டு இன்று காலை அந்த ராஜ்குமாரைப் பிடித்து வந்து கடை அருகே வைத்து விசாரித்து பிறகு வடகாடு போலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அந்த இளைஞன் போதையில் செய்துவிட்டதாகக் கூறினாலும் இதற்குப் பின்னால் வேறு யாரோ உள்ளனர்.
அதனால் ராஜ்குமாரிடம் சரியாக விசாரிப்பதுடன் அவனது செல்போனுக்கு குறிப்பிட்ட நாட்களில் யாரோடு பேசியுள்ளான் என்ற விபரங்களைச் சேகரித்து ஆய்வு செய்ய வேண்டும் என்கின்றனர் வியாபாரிகளும் பொதுமக்களும். மின் கசிவால் தீ பற்றி எரிந்ததாகக் கூறப்பட்ட சம்பவத்தில் சுமார் 40 நாட்களுக்குப் பிறகு ஒரு இளைஞன் தீ வைத்திருக்கும் சிசிடிவி காட்சி கிடைத்திருப்பது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.