2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைத் தெரிவித்து வருகின்றனர்.
இன்று சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கே.பி.முனுசாமி, "அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து உரிய நேரத்தில் ஆலோசித்துத் தலைமைக் கழகம் முறையாக அறிவிக்கும். முதல்வர் வேட்பாளர் விவகாரத்தை அ.தி.மு.க. நிர்வாகிகள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை எனத் தெரிவித்தார்". இருப்பினும் அ.தி.மு.க. முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவகாரத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வாய் திறக்காமல் மவுனமாக உள்ளனர் என்ற விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் இன்று மாலை அனைவரும் ஒற்றுமையாக இருந்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்று ஓ.பி.எஸ். ட்விட் செய்துள்ளார். இதற்கிடையே இதுதொடர்பான விவகாரத்தில் பதிலளித்து பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் 2021ஆம் ஆண்டும் அம்மாவின் ஆட்சி தொடரும் என்று தெரிவித்துள்ளார்.