கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே அருந்ததியர் தெருவில் பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தைக் கிடந்துள்ளது. இந்த நிலையில் அந்த குழந்தையை அப்பகுதியில் சுற்றித் திரியும் தெரு நாய்கள் கவ்வி சென்றுக் கொண்டிருப்பதைப் பார்த்த பொதுமக்கள் நாயை துரத்தியதில் குழந்தையை போட்டுவிட்டு நாய் ஓடிவிட்டது.
இதையடுத்து, இது தொடர்பாக பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் திட்டக்குடி காவல்துறையினர் சம்பவ இடத்தில் சென்று குழந்தையைக் கைப்பற்றி, குழந்தை யாருடையது? இப்பகுதியில் குழந்தையை வீசிச் சென்றது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "இதுபோல இறந்த குழந்தைகள் இப்பகுதியில் தொடர்ச்சியாக போட்டுவிட்டு செல்கின்றனர். மருத்துவக் கழிவுகள் இப்பகுதியில் கொட்டி செல்கின்றனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுபோன்று அடிக்கடி நடப்பதால் இப்பகுதியில் எங்களால் குடியிருக்க முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. அந்த அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. அதுமட்டுமின்றி வயல்வெளி பகுதிக்குச் செல்லும் பெண்கள் மற்றும் பெரியவர்களை தெருநாய்கள் துரத்தி விரட்டுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரிக்கை வைத்துள்ளனர்.
தெரு நாய்கள் குழந்தையை கவ்விய படி தெருக்களில் சுற்றித் திரிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது .