தமிழகத்தில் கரோனா ஊரடங்கை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் விமர்சனம் செய்துள்ளார்.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக முன்னாள் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று (21/05/2021) வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா என்னும் உயிர்க்கொல்லி தொற்றின் இரண்டாம் அலை தற்போது கோரத் தாண்டவம் ஆடிக்கொண்டிருப்பதையடுத்து, பொதுமக்கள் ஒருவித அச்ச உணர்வோடு வாழ்ந்துகொண்டிருக்கும் அவல நிலை தமிழகத்தில் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு இன்னும் துரிதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தமிழக மக்கள் மிகப்பெரிய ஆபத்தைச் சந்திக்கும் நிலை ஏற்படும்.
கரோனா தொற்று நோய் தாக்கினால் ஏற்படும் மனித உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணங்களாக விளங்குபவை ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதி இல்லாமை, ஆக்சிஜன் தட்டுப்பாடு, ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை, வெண்டிலேட்டர் தட்டுப்பாடு ஆகியவைதான். இவற்றைப் போக்க அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்துவருவதாக செய்திகள் வந்துகொண்டிருந்தாலும், யதார்த்த நிலை என்பது வேறாகத்தான் இருக்கிறது. இன்னும் மருத்துவத் தேவை பூர்த்தியாகவில்லை.
இன்றைய நிலவரப்படி, இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம். இந்த ஆண்டு மே மாதம் ஒன்றாம் நாள் 19,558 என்று இருந்த தினசரி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 20/05/2021 அன்று 35,579 ஆக உயர்ந்திருக்கிறது. இதேபோன்று 147 ஆக இருந்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, தற்போது 397 ஆக உயர்ந்திருக்கிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், கரோனா தொற்று நோய் தமிழகத்தில் உச்சக்கட்டத்தில் இருக்கிறது. இதுமட்டுமல்லாமல், தினசரி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குணமடைந்தவர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருக்கிறது. உதாரணமாக, 20/05/2021 அன்று மாலை நிலவரப்படி 35,579 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,368 என்ற அளவில்தான் இருக்கிறது.
கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் 10/05/2021 காலை 04.00 மணி முதல் 24/05/2021 காலை 04.00 மணி வரை இரண்டு வார காலத்திற்கு ஊரடங்கு அறி/விக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், 15/05/2021 காலை 04.00 மணி முதல் 24/05/2021 காலை 04.00 மணி வரை மேலும் சில புதிய கட்டுப்பாடுகளை விதித்து அரசு உத்தரவிட்டது. ஆனால், இந்த ஊரடங்கு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்றால் நிச்சயம் இல்லை. இதன் காரணமாக, கரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துகொண்டேவருகிறது. ஊரடங்கிற்கு முன்பு, அதாவது 09/05/2021 அன்று கரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,897 ஆக இருந்தது. ஆனால், இன்று அது 35,579 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், ஊரடங்கிற்கு முன்பு, அதாவது 09/05/2021 அன்று 236 ஆக இருந்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று 397 ஆக உயர்ந்துவிட்டது. கரோனா இரண்டாவது அலையில், டெல்லியில் 26,000 ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது 3,231 என்ற அளவிற்கு குறைந்துவிட்டது. இவ்வாறு குறைந்ததற்கு காரணம் ஊரடங்கை முழுமையாக நடைமுறைப்படுத்தியதுதான். இதேபோல், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு நாளைக்கு 65,000க்கும் மேலிருந்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 34,031 என்ற அளவுக்கு குறைந்துள்ளது. அதே சமயத்தில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைவிட மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் அதிகரித்துக்கொண்டேவருகிறது.
ஊரடங்கு எவ்வளவு முக்கியமோ அவ்வளக்கவ்வளவு தடுப்பூசி போடுவதும் இன்றியமையாதது. தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி, ஒருமுறை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 51,52,220 என்றும், இரண்டு முறை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 19,30,160 என்றும், ஆக மொத்தம் 70,82,380 தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டுள்ளன என்றும், அதே சமயத்தில், மேற்கு வங்காளம், உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், கேரளா, ஆந்திர பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் தமிழகத்தைவிட அதிக அளவில் தடுப்பூசிகளை மக்கள் போட்டுக்கொண்டுள்ளார்கள் என்றும் மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், வெண்டிலேட்டர்கள் ஆகியவை தங்கு தடையின்றிக் கிடைக்கவும், பெயரளவிற்கு இருக்கிற ஊரடங்கினை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வினை மக்களிடம் எடுத்துச் செல்லவும், தடுப்பூசியினை அதிக அளவில் கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழக முதலமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன்.
கருப்பு பூஞ்சை நோயினை தொற்று நோயாக தமிழக அரசு அறிவித்துள்ளது என்றாலும், 'முளையிலே கிள்ளி எறி' என்ற பழமொழிக்கேற்ப, இந்தத் தொற்றினை ஆரம்பத்திலேயே போக்கும் வகையில் அதற்குரிய மருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.